Home Hot News அன்வாரின் ஒரு சொல்லுக்காக காத்திருக்கிறது இந்திய சமுதாயம்

அன்வாரின் ஒரு சொல்லுக்காக காத்திருக்கிறது இந்திய சமுதாயம்

பி.ஆர்.ராஜன்

பரபரப்பு இல்லாத, மிகவும் அமைதியான ஓர் ஊர் கோல குபு பாரு. இரவு பத்து மணிக்கு மேல் அனைத்து நடவடிக்கைகளும் அடங்கிப் போய் ஒரே நிசப்தமாக இருக்கும்.

இப்படிப்பட்ட கோல குபு பாரு கடந்த சில தினங்களாக சுறுசுறுப்பாக அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. பின்னிரவு இரண்டு– மூன்று மணி வரையில் மக்கள் நடமாட்டம் ஓய்வதில்லை. அடுத்த 14 நாட்களுக்கு இந்த ‘கவ் பாய்’ டவுன் சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் மாறிவிடும்.

கோல குபு பாரு சட்மன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு முன்னோட்டமாக ஏப்ரல் 27ஆம் தேதி இங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அவர்களின் வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவுள்ளனர்.

அதன்பின்னர், அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் பிரச்சாரம் பட்டித்தொட்டிகளில், மூலைமுடுக்குகளில் மக்களின் தூக்கத்தைக் கெடுத்துவிடும். அந்த அளவுக்கு பிரச்சாரங்கள் களைகட்டும். மே 10 இரவு 11.59 மணி வரை இது தொடரும். மறுநாள் காலை வாக்களிப்பு நடைபெறும்.

இதுவே பொதுவான நடைமுறையாக இருக்கும். இந்த இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் வெற்றி பெற்றே ஆகவேண்டும். இந்த வெற்றி என்பது ஜசெகவுக்கு மட்டுமன்றி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும் ஒரு தன்மானப் பிரச்சினையும் சத்தியசோதனையும் ஆகும்.

இங்கு போட்டியில் களமிறங்கியிருக்கும் ஆளும் தரப்பின் பக்காத்தான் ஹராப்பான், எதிர்தரப்பில் பெரிக்காத்தான் நேஷனல் ஆகிய இரண்டு கூட்டணிகளுமே 18 விழுக்காட்டு இந்திய வாக்காளர்களை பெரிதும் நம்பியிருக்கின்றன. வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கக்கூடியவர்களாக இந்திய வாக்காளர்கள் இருக்கின்றனர் என்பதை இரண்டு தரப்புகளுமே வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுள்ளன.

இந்திய வாக்காளர்களைப் பொறுத்தவரை அன்வார் மீதான கோபம் இன்னும் தணிந்தபாடில்லை.   கடந்த இரண்டு நாட்களாக  பக்கத்தான் ஹராப்பான், பாரிசான் நேஷனல் கூட்டணி கட்சிகள் இங்கு களமிறங்கி மக்களை சந்திக்கத் தொடங்கியிருக்கின்ற நிலையில் இந்திய வாக்காளர்கள் மத்தியில் சிறிது மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதைக் காண முடிகிறது.

இருப்பினும், டத்தோஸ்ரீ அன்வார் தங்களுக்கு சொல்லப் போகும் செய்தியை வைத்துதான் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளரை ஆதரிப்பதா இல்லையா என்பதை அவர்கள் முடிவு செய்யவுள்ளனர்.

கடந்த பொதுத்தேர்தலில் இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட பக்காத்தான் ஹராப்பான் வாக்குறுதிகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.  தாங்கள் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை என்பது இந்திய சமுதாயத்தின் கோபமாக இருக்கிறது.

இந்த இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் வெற்றி பெற்றாலும் தோல்வி கண்டாலும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்திலும் மத்திய மடானி அரசாங்கத்திலும் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வரப் போவதில்லை.

ஆனால், டத்தோஸ்ரீ அன்வாரின் செல்வாக்கைப் பரிசோதிக்கும் ஒரு களமாக இந்த இடைத்தேர்தல் அமைந்திருப்பதுதான் இங்கு பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற ஒரு கட்டாய நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதன் அடிப்படையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரமாட்டோம் என்று கூறிய மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரனை அழைத்து இந்த இடைத்தேர்தலில் மஇகா உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பிரதமரின் அழைப்பை ஏற்று மஇகாவும் அங்கு களமிறங்கி தேர்தல் நடவடிக்கை அறையையும் திறந்து இந்திய வாக்காளர்களை வீடு வீடாகச் சென்று சந்திப்பதற்கு பல தனித்தனி குழுக்களையும் அமைத்திருக்கிறது.

இந்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறுவதற்கும் காயம் பட்டிருக்கும் இந்திய சமுதாயத்தின் மனம் குளிர வைப்பதற்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் வழங்கப் போகும் வாக்குறுதிகளும் செய்திகளும் அதீத முக்கியம் வாய்ந்தவையாகவும் அவசியமானதாகவும் இருக்கின்றது.

பிரச்சாரத்திற்காக பிரதமர் நிச்சயமாக கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதிக்கு

 வருவார் என்பது திண்ணம். இங்கு வந்து இந்திய சமுதாயத்திற்கு அவர் சொல்லப் போகும் செய்திதான் ஆட்டக்களத்தில் ஒரு தெளிவான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது நிதர்சனம்.

டத்தோஸ்ரீ அன்வார் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்பதற்கு கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதி இந்திய வாக்காளர்கள் காத்திருக்கின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version