Home Hot News சென்னை மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் 191 கர்ப்பிணிகளுக்கு கொரோனா

சென்னை மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் 191 கர்ப்பிணிகளுக்கு கொரோனா

சென்னை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 191 கர்ப்பிணிகளுக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது 5 அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு அமைச்சருக்கும் 3 மண்டலங்கள் வீதம் ஒதுக்கப்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் அமைச்சர்கள், ஐஏஎஸ், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், சுகாதாரத்துறையினர் தீவிரமான ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட கர்ப்பிணிகளின் எண்ணிக்கை 33 ஆக இருந்த நிலையில் மே மாதத்தில் நோய் பாதிப்பிற்கு ஆளாகும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது. அதன்படி எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 100 கர்ப்பிணிகளுக்கும், அரசு ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் 45 கர்ப்பிணிகளுக்கும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 30 கர்ப்பிணிகளுக்கும், திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் 29 கர்ப்பிணிகள் என 204 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கொரோனா தொற்று குழந்தைகளுக்கும் வந்து விடக்கூடாது என்று அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். அதில் சிலர் குணமாகி வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மேலும் 191 கர்ப்பிணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதன்படி எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் 68 கர்ப்பிணிகளும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 24 பேரும், ராயபுரம் மருத்துவமனையில் 70 பேரும், திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் 29 பேர் என 191 கர்ப்பிணிகளுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் நேற்று சோதனையின் முடிவுகள் வந்தன. அதில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் அனைவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி மருத்துவமனைகளில் தனிமை வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு குழந்தைகளுக்கும் தொற்று ஏற்படாத வகையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் 191 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version