Home உலகம் சூரியகிரகணம் – கர்ப்பிணிகள் பார்க்கலாமா?

சூரியகிரகணம் – கர்ப்பிணிகள் பார்க்கலாமா?

எப்போது, எங்கு, எப்படி பார்க்கலாம்?  அறிவியல் உண்மைகள் தான் என்ன?

முக்கிய வானியல் நிகழ்வுகளுள் ஒன்றான சூரிய கிரகணம் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.42 மணி முதல் மாலை 6.41 வரை சூரிய கிரகணம் நடக்கும்.

இந்தச் சூரியகிரகணம் இந்தியாவிலும் ஆசியாவின் பெரும்பான்மையான பகுதிகளிலும் தெரியாது. இந்தச் சூரிய கிரகணம் எப்படிப்பட்டது, எங்கெல்லாம் பார்க்க முடியும், எப்படிப் பார்க்க வேண்டும், சூரியனைச் சுற்றியுள்ள புதிர்கள் என்னென்ன என்பன போன்ற கேள்விகளுக்கு நமக்கு பதில் தருகிறார் இந்திய அரசின் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் மூத்த விஞ்ஞானி டி.வி. வெங்கடேஸ்வரன்.

சூரிய கிரகணம் என்பது என்ன?

மிக எளிமையாகச் சொல்வதென்றால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது பூமியில் இருந்து பார்த்தால் சூரியன் முழுமையாகவே, பகுதி அளவிலோ மறைக்கப்பட்டிருக்கும் இதைத்தான் சூரிய கிரகணம் என்கிறோம். தமிழில் இதைச் சூரியன் மறைப்பு என்று கூறலாம்.

தற்போது நடக்கும் சூரிய கிரகணம் எப்படிப்பட்டது?

இப்போது நடக்க இருப்பது வளையவடிவச் சூரிய கிரகணம். இதைக் கங்கண சூரிய கிரகணம் என்றும் கூறலாம். கையில் நாம் போடும் வளைய வடிவக் கங்கணத்தை இது குறிக்கிறது.

சந்திரன் வட்டவடிவம். சூரியனும் வட்ட வடிவமாகத் தெரிகிறது. சந்திரன் சூரியனை மறைக்கும்போது அது முழுமையாக மறைப்பதில்லை. அதனால் சந்திரனைச் சுற்றியுள்ள, சூரியனை மறைக்காத பகுதிகள் ஒளி வட்டமாகக் கண்ணுக்குத் தெரியும். அப்போது சூரியன் நடுவில் கறுப்பாகவும், சுற்றிலும் நெருப்பு வளையமாகவும் தென்படும். அதுபோன்ற சூரிய கிரகணம்தான் இப்போது நடக்க இருக்கிறது.

ஜூன் 10-ஆம் தேதி நடக்கும் சூரிய கிரகணத்தை எங்கிருந்தெல்லாம் பார்க்கலாம்?

எப்போதுமே சூரிய கிரகணம் என்பது உலகத்தின் ஒரு சிறு பகுதியில் மட்டும்தான் தென்படும். தற்போது நடக்கும் சூரிய கிரணம் இந்தியாவில் தெரியாது. அமெரிக்காவின் அலாஸ்கா, கிரீன் லாந்து, ஐரோப்பா, ரஷ்யாவின் சில பகுதிகள், கனடா போன்ற இடங்களில் இருந்துதான் இந்த சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும்.

நேரில் பார்க்க இயலாதவர்கள் வேறு எந்த வழியில் பார்க்க முடியும்?

இந்தியாவில் நேரடியாக சூரிய கிரகணத்தைப் பார்க்க இயலாதவர்கள் இணையதளங்களில் பார்க்கலாம். நாசா உள்ளிட்ட பல அமைப்புகள் இணையதளங்களிலும், தொலைக்காட்சிகளும் சூரியகிரகணத்தைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கின்றன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version