Home மலேசியா கார் மோதியதில் பாதசாரி பலி

கார் மோதியதில் பாதசாரி பலி

கோலாலம்பூர், ஆகஸ்ட் 28 :

கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தை (WTC) நோக்கிச் செல்லும் சுல்தான் இஸ்கந்தர் நெடுஞ்சாலையில், விஸ்மா தானி வெளியேறும் பகுதிக்கு அருகே கார் ஒன்று சறுக்கி விழுந்ததில் பாதசாரி ஒருவர் உயிரிழந்தார்.

டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் நூர் டெல்ஹான் யஹாயா கூறுகையில், இன்று காலை 8.03 மணிக்கு இந்த சம்பவம் குறித்து அவரது தரப்புக்கு தகவல் கிடைத்தது என்றார்.

முதற்கட்ட விசாரணையில், காலை 7.55 மணியளவில் 22 வயது இளைஞன் ஓட்டிச் சென்ற பெரோடுவா பெஸ்ஸா வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது பக்கம் சறுக்கி கவிழ்ந்ததில் விபத்து நிகழ்ந்தது.

“அப்போது கார் சாலையோரமாக இடது பக்கத்தில் நடந்து கொண்டிருந்த ஒரு நபரை மோதியது. இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

விபத்துக்குள்ளான கார் ஓட்டுநருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோலாலம்பூர் மருத்துவமனையின் (HKL) தேசிய தடயவியல் மருத்துவ பிரிவிற்கு (IPFN) அனுப்பப்பட்டது.

“இந்த வழக்கை கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை (JSPT) சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன் படி விசாரித்து வருகிறது.

“சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் ஜாலான் துன் எச் எஸ் லீ போக்குவரத்து காவல் நிலையத்தை (ஜேஎஸ்பிடி) 03-20719999 என்ற எண்ணிலும், கோலாலம்பூர் போக்குவரத்து ஹாட்லைன் 03-20260267/69 என்ற எண்ணிலும் அல்லது அருகிலுள்ள ஏதேனும் காவல் நிலையத்திலும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version