Home Top Story அகதிகள் என சந்தேகிக்கப்படும் 300 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று மூழ்கும் நிலையில் வியட்நாம்...

அகதிகள் என சந்தேகிக்கப்படும் 300 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று மூழ்கும் நிலையில் வியட்நாம் – சிங்கப்பூர் எல்லையில் மீட்பு

கொழும்பு, நவம்பர் 9:

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள மக்கள் நாட்டை விட்டு அவசரமாக வெளியேறி வருகின்றனர்.

அந்தவகையில் இலங்கையில் இருந்து பெண்கள், 30 குழந்தைகள், முதியவர்கள் உள்பட 303 பேர் ஒரு கப்பலில் அங்கிருந்து புறப்பட்டனர். அந்த கப்பல் தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்தபோது திடீரென்று பழுதடைந்தது. இதனால் கப்பல் அங்கிருந்து நகர முடியாமல் நடுக்கடலில் தத்தளித்தது.

இதற்கிடையே கப்பலை இயக்கியவர் அதிலிருந்து குதித்து தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. அவர் எப்படி தப்பினார் என்ற விவரம் தெரிய வில்லை. 303 பேர் இருந்த அந்த கப்பல் கடலில் மூழ்கும் நிலையில் இருந்தது. இதனால் கப்பலில் உள்ள இலங்கை அகதிகள் தவிப்புக்குள்ளானார்கள்.

இதற்கிடையே கப்பலில் இருந்த ஒருவர் இலங்கை கடற்படையினரை தொடர்பு கொண்டு தாங்கள் ஆபத்தில் இருப்பதாக தெரிவித்தார். மேலும் கப்பலில் இருந்த ஒருவர் பேசும் ஆடியோ வெளியானது. கப்பல் காற்றினால் தள்ளப்பட்டு பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமுக்கு இடையே தத்தளித்துக் கொண்டிருப்பதாக கூறினார். தங்களை காப்பாற்றுமாறும் ஐ.நா.விடம் இதனை தெரியப்படுத்தும் படியும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடியது.

இந்த நிலையில் படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு வியட்நாம் நோக்கி அழைத்துச் செல்லப்படுவதாக சிங்கப்பூர் அதிகாரிகள் இலங்கைக்கு தகவல் தெரிவித்தனர். இலங்கை கடற்படை கப்பலில் இலங்கையர் ஒருவர் இருப்பது மட்டுமே உறுதிபடுத்தி உள்ளது என்றும் மற்றவர்கள் யார் என்ற விவரம் வியட்நாமில் தரை இறங்கிய பின்னரே கண்டறியப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version