Home தமிழ்ப்பள்ளி தமிழாசிரியர் இந்து சமயக் கலாச்சார மன்ற 39ஆம் ஆண்டு முத்தமிழ் விழா நீலாய்...

தமிழாசிரியர் இந்து சமயக் கலாச்சார மன்ற 39ஆம் ஆண்டு முத்தமிழ் விழா நீலாய் தமிழ்ப்பள்ளி வெற்றி பெற்றது

 

சிரம்பான், டிச. 22-

நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழாசிரியர் இந்து சமயக் கலாச்சார மன்றத்தின் ஏற்பாட்டில் 39ஆம் ஆண்டு முத்தமிழ் விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைத்த ராசா நாடாளுமன்ற உறுப்பினர் சா கி சின் அவ்விழாவுக்கு 3 ஆயிரம் ரிங்கிட் மானியம் வழங்கினார்.

தாய்மொழி பள்ளிகளில்தான் ஒரு சமுதாயத்தின் கலை கலாச்சார பாரம்பரிய சமய பண்போடு ஒரு மாணவர் செதுக்கப்படுகிறார் என்றும் எனவே இந்தியப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவதைத் தங்கள் கடமையாகக் கொள்ள வேண்டும் என்று சா அறிவுறுத்தினார்.

மேலும் பேசுகையில் இப்படிப்பட்ட ஒரு மாபெரும் நிகழ்ச்சியை நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்,  ஆசிரியர்களுக்காக ஏற்பாடு செய்த மன்ற உறுப்பினர்களை வெகுவாகப் பாராட்டினார்.

இங்கு பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளியில் காலை 8.00 தொடக்கம் பிற்பகல் 3.30 வரை மிக விமரிசையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்காகத் திருப்பாடல் பாடும் போட்டி, கோலப் போட்டி,  வர்ணம் தீட்டும் போட்டி, சமயப் பேச்சுப் போட்டி, சமயப் புதிர் போட்டி, சமய நாடகப் போட்டியும் நடத்தப்பட்டன. ஆசிரியர்களுக்காக பஞ்சபுராணம் ஓதும் போட்டியும் சமய கட்டுரை எழுதும் போட்டியும் நடைபெற்றன.

இவ்வருடம் 61 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து 42 பள்ளி மாணவர்கள் மட்டுமே இப்போட்டிகளில் பங்கெடுத்தனர். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விழாவில் உற்சகமாய் கலந்து சிறப்பித்தனர்.

பெரும்பாலான போட்டிகளில் வெற்றிபெற்ற நீலாய் தமிழ்ப்பள்ளி ஒட்டுமொத்த வெற்றியாளராக வாகை சூடியது. இரண்டாவது இடத்தைப் போர்ட்டிக்சன் தமிழ்ப்பள்ளி தட்டிச் சென்றது. நாடகப் போட்டியில் செனாவாங் தமிழ்ப்பள்ளி முதலிடத்தையும் லோபாக் தமிழ்ப்பள்ளி இரண்டாம் இடத்தையும் நீலாய் தமிழ்ப்பள்ளி மூன்றாம் இடத்தையும் தட்டிச் சென்றன.

இவ்விழாவில் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன், நெகிரி செம்பிலான் மாநிலக் கல்வி இலாகாவின் பாலர் பள்ளி,  ஆரம்பப் பள்ளிகளுக்கான உதவி இயக்குநர்  தனபாலன் நாராயணன், மொழிப் பிரிவு உதவி இயக்குநர் செல்வமணி பாஸ்கரனும் இந்நிகழ்சியில் கலந்து சிறப்பித்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version