Home Hot News அக்கப்போர் குற்றச்சாட்டு ரமணன் கொதிப்பு

அக்கப்போர் குற்றச்சாட்டு ரமணன் கொதிப்பு

பி.ஆர்.ராஜன்

டத்தோ ரமணன் தலைமையிலான மித்ரா சிறப்புப் பணிக்குழுவின் கூட்டங்கள் ‘பப்’பில் நடத்தப்பட்டன என்று ஒற்றுமைத்துறை துணை அமைச்சரின் அக்கப்போர் குற்றச்சாட்டு, அபாண்டமாக பழி சுமத்தியது  அதில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சில தினங்களுக்கு  முன் மலேசிய இந்திய மக்கள் பிரதிநிதிகளுடனான ஒரு சிறப்பு சந்திப்பின்போது அவர் சொன்ன இந்த குற்றச்சாட்டு மித்ரா சிறப்புப் பணிக்குழுவில் இடம்பெற்றிருந்த முன்னாள் செயற்குழு உறுப்பினர்களுக்கும் சிறப்புப் பணிக்குழுவின் முன்னாள் தலைவரான டத்தோ ரமணன்  ராமகிருஷ்ணனுக்கும் அளவு கடந்த கோபத்தை கிளறிவிட்டிருக்கிறது.

இதுவரை மித்ரா பற்றி எந்த ஒரு கருத்தும் சொல்லாத டத்தோ ரமணன், மித்ரா இப்போது எந்த இலக்கில் போய்க்கொண்டிருக்கிறது என்ற கேள்வியை முன்வைத்திருக்கிறார். அடுத்தடுத்து வாண வெடியை எதிர்பார்க்கலாம்.

அந்த சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட சிறப்புப் பணிக்குழுவின் முன்னாள் செயற்குழு உறுப்பினர்கள் அதற்கு உடனடியாக ஆட்சேபம் தெரிவித்திருக்கின்றனர். சுங்கைபூலோ தொகுதி பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்து அப்பொறுப்பிலிருந்து விலகும் வரை மிக நேர்த்தியாகவும் வௌிப்படைத்தன்மையுடனும் செயல்பட்டிருக்கிறார்.

மித்ரா தலைமை இயக்குநராக இருந்த ரவீந்திரன் நாயர், சிறப்புப் பணிக்குழுவில் இடம்பெற்றிருந்த செயற்குழு உறுப்பினர்கள், மித்ரா அலுவலகப் பணியாளர்கள், பொது மக்கள்  அனைவருமே டத்தோ ரமணின் ஆக்கப்பூர்வமான செயல்திறன்களைக் கண்டு வியந்தனர்.

 மித்ரா சிறப்புப் பணிக்குழுத் தலைவராக பொறுப்பேற்றதும் அலுவலகம் சென்ற  டத்தோ ரமணன் பொழிவிழந்து இருள் சூழ்ந்திருந்ததை கண்டு  மனம் நொந்து சொந்த பணத்தைக்கொடுத்து அந்த அலுவலகத்திற்கு புத்தொளியைக் கொண்டு வந்தார். அலுவலகப் பணியாளர்களுக்கு சௌகரியமான சூழலை ஏற்படுத்தி அவர்கள் மகிழ்ச்சியுடன் நிம்மதியாக பணி செய்வதற்கு வழி வகுத்தார்.

ஓய்வு ஒளிச்சலின்றி அவர் முன்னெடுத்த திட்டங்கள் சமுதாயத்திற்கு மிகப் பெரிய பலன்களை கொண்டு வந்தன. நலிந்தோர், பி40 பிரிவு உயர்கல்வி மாணவர்கள், தமிழ்ப்பள்ளிகள், தமிழ் தனியார் பாலர் பள்ளிகள், சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வந்தவர்கள் மித்ராவின் நிதி உதவிகளால் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். பி40 இந்திய இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சிக்கு வித்திட்டவர்.

அதேசமயத்தில்  மித்ரா மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளும் மெல்ல மெல்ல மறையத் தொடங்கின. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்) நம்பிக்கைக்குரிய அமைப்பு சான்றிதழை மித்ராவுக்கு வழங்கியது.

மித்ரா நிதி வழங்குதலில் அதற்குரிய   நடைமுறைகள் மிகக் கடுமையாக பின்பற்றப்பட்டன. செயற்குழுவினரின் விரிவான ஆய்வுகளுக்கும் கலந்துரையாடல்களுக்கும் பின்னரே ஒருமித்த கருத்துடன் அனைத்து திட்டங்களும் அமல்படுத்தப்பட்டன.

மித்ராவின் அனைத்து திட்டங்களும் அதற்குரிய கொள்கைகள் வகுக்கப்பட்டு முறையாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. சுறுசுறுப்பாகவும் நடைமுறைகள் மிகச் சரியாக பின்பற்றியும் சமுதாயத்திற்கான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டதில் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே மித்ராவுக்கு வழங்கப்பட்டிருந்த 100 மில்லியன் ரிங்கிட் (10 கோடி) முழுமையாக பயன்படுத்தப்பட்டு  அதன் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டது.

டத்தோ ரமணன் தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத்துறை துணை அமைச்சராக பதவி உயர்வு  பெற்ற பின்னர் மித்ரா பிரதமர் இலாகாவிலிருந்து ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு மாற்றப்பட்டது. அன்று தொடங்கிய பிரச்சினைகளும் சிக்கல்களும் இன்று வரை நீண்டு கொண்டே இருக்கின்றன.

2024 பிறந்து மூன்று  மாதங்கள் கடந்து விட்டன. இன்னும் உருப்படியாக எந்தவொரு திட்டமும் நிதி வழங்குதல் அறிவிக்கப்படவும் இல்லை, அமல்படுத்தப்படவும் இல்லை. சண்டை போடுவதிலும் அடுத்தவர்கள் மீது  அபாண்டங்களை சுமத்துவதிலும் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது.

வரும் அக்டோபர் மாதத்திற்குள் இந்த 10 கோடியும் முழுமையாக செலவழிக்கப்பட வேண்டும். இனி எஞ்சியிருப்பது 6 மாதங்கள் மட்டுமே. இதற்குள்ளாக இந்த 10 கோடி ரிங்கிட்டும் முழுமையாக பயன்படுத்தப்படுமா அல்லது அரசாங்கத்திடமே திருப்பித் தரப்பட்டு இந்திய சமுதாயத்திற்கு குறிப்பாக பி40 பிரிவு மக்களுக்கு பட்டை நாமம் சாத்தப்படுமா?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version