Home Hot News இளம் வாக்காளர்கள் யார் பக்கம்? – வாக்குகள் சிதறுமா

இளம் வாக்காளர்கள் யார் பக்கம்? – வாக்குகள் சிதறுமா

 

* கோலகுபுபாரு இடைத்தேர்தல், அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்

* புதிய வியூகங்களை வகுக்கத் தயாராகி வரும் அரசியல் கூட்டணிகள்

* என்ன முடிவு செய்யப் போகிறார்கள் கோலபுகுபாரு இந்திய வாக்காளர்கள்

எம்.எஸ். மலையாண்டி

சிலாங்கூர் மாநிலம், கோலகுபுபாரு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் நாட்டின் அரசியல் களத்தின் முக்கியமான தேர்தல் களமாக அமைந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஏனெனில், இந்த இடைத் தேர்தல் முடிவு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் செயல்திறனை மதிப்பிடக்கூடிய ஓர் அளவுகோலாக அமையும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
வரும் மே 11ஆம் தேதி நடைபெறும் கோலகுபுபாரு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு எப்படி அமையும் என்பதை அறிந்து கொள்ள நாடே காத்திருக்கிறது என்பதை அவர்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றனர்.

முழுவீச்சில் தயார்

பக்காத்தான் ஹராப்பானும் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியும் தங்களை முழு வீச்சில் தயார்ப்படுத்திக் கொண்டு வருகின்றனர். கோலகுபுபாரு சட்டமன்றத் தொகுதி ஜசெகவின் கோட்டையாகவே இதுவரை இருந்து வந்திருக்கிறது.
ஜசெகவைச் சேர்ந்த லீ கீ ஹியோங், இந்தத் தொகுதியில் 3 தவணைகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்திருக்கிறார். புற்றுநோய் காரணமாக இவர் மார்ச் 21ஆம் தேதி காலமானதை அடுத்து அத்தொகுதி காலியானது.
அந்த அடிப்படையில் வரக்கூடிய இடைத் தேர்தலிலும் ஒற்றுமை அரசாங்கத்தின் உறுப்பு கட்சியான ஜசெகதான் போட்டியிடவிருக்கிறது. இது தொடர்பில் ஒற்றுமை அரசாங்கத்திற்குள் கருத்திணக்கமும் ஏற்பட்டிருக்கிறது.

கருத்திணக்கம்

ஒற்றுமை அரசாங்கத்தின் உறுப்பு கட்சியான ஜசெகவுக்குச் சொந்தமான தொகுதியாக கோலகுபுபாரு சட்டமன்றத் தொகுதி இருப்பதால் பாரிசான் நேஷனல் தனது வேட்பாளரை அங்கு நிறுத்தவில்லை என்று அதன் தலைவரும் அம்னோ தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருக்கிறார்.
இந்த இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் போட்டியிடப் போவதில்லை. மாறாக, அங்கு நிறுத்தப்படும் வேட்பாளர் பற்றி டத்தோ ஸ்ரீ அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கமே தீர்மானிக்கட்டும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மசீச, ம.இ.கா. நிலைப்பாடு

இந்த நிலையில் கோலகுபுபாரு இடைத் தேர்தலில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ம.இ.கா. ஈடுபடாது என்று கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் சில தினங்களுக்கு முன்பு கோடிகாட்டியிருந்தார்.
கோலகுபுபாரு இடைத் தேர்தலில் நாங்கள் அங்கம் வகிக்கும் பாரிசான்
நேஷனல் வேட்பாளர் போட்டியிடவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டால்தான் ம.இ.கா.பிரச்சாரத்தில் ஈடுபடும் என்று நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், வாக்குவேட்டையில் ஈடுபட ம.இ.கா. இணக்கம் தெரிவித்திருக்கிறது என்று நேற்று பிரதமர் கூறினார்.
இதற்கிடையே, பாரிசான் நேஷனல் உறுப்பு கட்சியான டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தலைமையிலான மசீசவும் இதே போன்ற ஒரு நிலைப்பாட்டையும் எடுத்திருக்கிறது.
இந்த இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் போட்டியிடாத பட்சத்தில் மசீச வாக்குவேட்டையில் ஈடுபடாது என்று அக்கட்சி தலைமையகம் வெளியிட்ட அறிக்கை கூறியிருக்கிறது.
மசீசவின் அரசியல் வளர்ச்சி செயலவைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

பாரிசான் நேஷனல் உதவும்

இந்த நிலையில் ம.இ.கா.வும் மசீசவும் கொண்டிருக்கும் நிலைப்பாடு பற்றி கருத்துரைத்திருக்கும் தேசிய முன்னணி துணைத் தலைவரும் அம்னோ தேசிய உதவித் தலைவருமான டத்தோஸ்ரீ முகமட் அசான் கோலகுபுபாரு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்லில் போட்டியிடும் ஒற்றுமை அரசாங்கத்தைச் சேர்ந்த வேட்பாளருக்கு பாரிசான் நேஷனல் உறுப்பு கட்சிகள் அவசியம் உதவவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
கோலகுபுபாரு சட்டமன்றத் தொகுதி ஒற்றுமை அரசாங்கத்தின் உறுப்பு கட்சி ஜசெகவுக்கு சொந்தமானதாக இருப்பதால் அந்த கட்சியே அங்கு போட்டியிடுவதற்கு ஏற்கெனவே கருத்திணக்கம் காணப்பட்டிருக்கிறது.
இதனை பாரிசான் மதிக்கிறது. ஆகவே, பாரிசான் உறுப்பு கட்சிகள் இந்த இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார். இந்த விஷயம் பாரிசான் நேஷனலுக்கு கையாளப்பட்டு தீர்வு காணப்படும் என்பதையும் அவர் கோடிகாட்டியிருக்கின்றார்.

வெற்றித் தோல்வி

கோலகுபு பாரு இடைத் தேர்தலில் வெற்றித் தோல்வி யார் கையில் என்பதையும் தற்போது விவாதத்திற்குரியதாக மாறியிருக்கிறது. இந்த நிலையில் சில தரப்பினர் அத்தொகுதி இந்திய வாக்காளர்கள் இடைத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என கூறிவருகின்றனர்.
அப்படியே அவர்கள் இந்த இடைத் தேர்தலை புறக்கணித்தாலும் பக்காத்தான் ஹராப்பானுக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடாது எனவும் அதுமட்டுமன்றி இதுபோன்ற சூழ்நிலையில் பெரிக்ககாத்தான் நேஷனலுக்கு வெற்றி வாய்ப்பு கூடும் நிலையும் வராது என அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.
வாக்களிப்பது ஜனநாயக உரிமை. அதனை நிறைவேற்றவிடாமல் தடுப்பது, ஜனநாயகத்திற்கு விரோதமானது. யாருக்கு வாக்களிப்பது என்பதும் வாக்காளர்களின் உரிமை. எந்தக் கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெறவேண்டும் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை அத்தொகுதி இந்திய வாக்காளர்களிடமே விட்டு விட வேண்டும்.
கோலகுபுபாரு சட்டமன்றத் தொகுதியில் 50 விழுக்காடு மலாய் வாக்காளர்களும் 30 விழுக்காடு சீன வாக்காளர்களும் 18 விழுக்காடு இந்திய வாக்காளர்களும் உள்ளனர்.
இந்த நிலையில் கோலகுபுபாரு சட்டமன்றத் தொகுதியை ஜசெக தற்காத்துக் கொள்ளவேண்டுமானால் 60 விழுக்காடு இந்திய வாக்காளர்களின் வாக்குத் தேவை என்பதை அண்மையில் ஜசெகவைச் சேர்ந்த ஒரு தலைவர் கூறியிருக்கின்றார்.
இந்திய வாக்காளர்கள் யார் பக்கம் சாய்கிறார்களோ அவர்களுக்கே இந்த இடைத்தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்பதும் அவருடைய கருத்தாக உள்ளது. சீன வாக்காளர்கள் ஜசெக வேட்பாளரை முழுமையாக ஆதரிக்கும் பட்சத்தில் மலாய் வாக்காளர்கள் சிதறக்கூடிய ஒரு சூழ்நிலை உள்ளது.
ஆகவே, இந்த இடைத் தேர்தலில் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கக் கூடியவர்களாக இந்திய வாக்காளர்களாகதான் இருப்பார்கள் என்பதை அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

இளம் வாக்காளர்கள்

இந்த நிலையில் கோலகுபுபாரு இடைத் தேர்தலில் இளம் வாக்காளர்கள் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளரைத் தான் ஆதரிப்பார்கள் என்று பெர்சத்து மகளிர் பிரிவு தகவல் குழுத் தலைவர் நூருல் ஸஸ்வானி நோ கூறியிருக்கின்றார்.
இளம் வாக்காளர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பின்போது அவர்கள் பெரிக்காத்தான் நேஷனல் பக்கம் ஆதரவாக இருப்பதை அறிய முடிகிறது என்றார் அவர்.
ஆயினும், கோலகுபுபாரு தொகுதி வாக்காளர்களின் இதயங்களைக் கவர்வது எந்தக் கூட்டணிக்கும் அவ்வளவு எளிதான பணியாக அமையப் போவதில்லை. தேர்தல் களம் காணும் கூட்டணிகள் நிச்சயம் புதிய வியூகங்களை வகுத்தாகவேண்டும். இதன் மூலமே வாக்காளர்களை அந்தக் கூட்டணிகளால் கவர முடியும்.
இந்த இடைத் தேர்தலில் வாக்குகள் சிதறும் பட்சத்திலும் திசை மாறும் பட்சத்திலும் அது எந்தக் கூட்டணிக்கு சாதகமாக அமைகிறதோ அந்தக் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
கோலகுபுபாரு மக்கள் என்ன முடிவு செய்யப் போகிறார்கள் என்பது மே 11ஆம் தேதி தெரிந்துவிடும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version