Home ஆன்மிகம் மனநிம்மதி கிடைக்க

மனநிம்மதி கிடைக்க

சந்தோஷம், பணம் வேண்டும் என சொல்லி கடவுளிடம் முறையிடுபவர்களை விட நிம்மதி வேண்டும் என முறையிடுபவர்கள் தான் அதிகம். மனிதர்களின் மனதை சந்தோஷப்படுத்துவது எளிது. ஆனால் நிறைவு மற்றும் நிம்மதியை உணர செய்வது கடினம். நினைத்தது நடந்தால் மனம் மகிழ்ச்சி அடையும். ஆனால் என்ன கிடைத்தாலும் மனதில் ஏதோ ஒரு அழுத்தம், பதற்றம், குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது என்பவர்கள் எளிமையாக சில குறிப்பிட்ட மந்திரங்களை காலை மற்றும் இரவில் தொடர்ந்து சொல்லி வரலாம். இந்த மந்திரங்களை முழு கவனத்துடன் சொல்ல சொல்ல மனதில் அமைதி நிலை ஏற்பட துவங்கும்.

உலகத்தில் உள்ள அனைவரும் தேடிக் கொண்டிருக்கும் ஒரே விஷயம், மனநிம்மதி தான். பணம் இல்லாததால் பலவிதமான பிரச்சனையாகளால் மனநிம்மதி இழந்து தவிப்பதாக சிலர் சொல்வார்கள். அதே சமயம் பணம், வசதியுடன் இருக்கும் ஒருவரிடம் கேட்டால், ” எவ்வளவு பணம், சொத்து, செல்வாக்கு இருந்தும் என்ன மனதில் நிம்மதியே இல்லை” என்பார். அப்படியானால் மன நிம்மதி என்பது என்ன? எது நிம்மதியை தரக் கூடியது? என்ற கேள்வி வருகிறது. நம்முடைய மனம் விரும்புவது நடந்தால் சந்தோஷமும், நிம்மதியும் அடைகிறது. எந்தவித பதற்றமும் இல்லாமல் இஷ்ட தெய்வத்தின் கோவிலுக்கு சென்றால் மனம் நிம்மதியை உணர்கிறது. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயம் மன நிம்மதி தருவதாக இருக்கும்.

அப்படி இல்லாமல் மனம் எப்போதும் நிம்மதியாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் தினமும் இந்த மந்திரங்களை சொல்லி வரலாம். தினமும் இந்த மந்திரங்களை சொல்ல சொல்ல மனதில் தேவையற்ற சிந்தனைகள், எதிர்மறை எண்ணங்கள், பயம், பதற்றம் ஆகியவை நீங்கி, மனம், அமைதியை உணர துவங்கும். தினமும் காலையில் எழுந்து குளித்து விட்டு, பூஜை அறையில் நெய் விளக்கு ஏற்றி வைத்து, வாசனையான ஊதுபத்தியை ஏற்றி வைத்து, தீர்த்தத்தால் கைகளை நன்கு துடைத்து, சுத்தம் செய்த பிறகு இரண்டு கைகளிலும் சிறிது துளசி வைத்துக் கொண்டு,

“ஓம் அனந்தாய நமஹ
ஓம் ஆனந்தாய நமஹ
ஓம் யோகினே நமஹ”

என்ற மூன்று மந்திரங்களையும் தலா மூன்று முறை நிதானமாக சொல்ல வேண்டும். மந்திரங்களின் மீது உங்களின் கவனத்தை வைத்து சொல்ல வேண்டும். மொத்தம் 9 முறை இந்த மந்திரங்களை சொல்லி முடித்ததும் அந்த மந்திரங்களை மனதிற்குள் நினைத்து, கண்களை மூடி, சிறிது நேரம் தியானம் செய்து விட்டு, உங்களின் தினசரி வேலைகளை செய்ய துவங்குங்கள். இதை தினமும் செய்து வந்தால் மனதில் இருக்கும் அழுத்தம், பதற்றம் நீங்கி, அமைதியும், நிம்மதியும் ஏற்படுவதை உணர முடியும். இது அன்றைய நாள் முழுவதும் தொடரும்.

அதே போல் இரவில் தூங்க செல்வதற்கு முன்பாக சிவபெருமானை மனதார நினைத்து, நெற்றியில் திருநீறு அணிந்து,

“சவ்வும் நம சிவாய நம
ஸ்ரீயும் நம சிவாய நம
அங் உங் வங் சிவாய நம
ஓம் நம சிவாய நம”

என்ற மந்திரத்தை 11 முறை சொல்லுங்கள். பிறகு, “சிவபெருமானே நீயே துணை” என சொல்லிவிட்டு தூங்கச் செல்லுங்கள். இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் மனதில் நிம்மதியும், தைரியமும், நம்பிக்கையும் ஏற்படும். இரவில் நிம்மதியான, சுகமான தூக்கம் வரும். கெட் கனவுகள் வராது. இந்த மந்திரத்தை தொடர்ந்து 48 நாட்கள் இரவில் தூங்கச் செல்வதற்கு முன் சொல்லி வந்தால் வாழ்வில் பல விதமான மாற்றங்கள் ஏற்படுவதை உணர முடியும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version