Home Top Story முடிவுக்கு வரும் பாலஸ்தீன போர்? நெதன்யாகுவை கைது செய்ய திட்டம்

முடிவுக்கு வரும் பாலஸ்தீன போர்? நெதன்யாகுவை கைது செய்ய திட்டம்

ஆம்ஸ்டர்டம்: பாலஸ்தீனம் மீதான போரில் ஏராளமான விதி மீறல்கள் நடந்திருப்பதாகவும், இந்த போரே தேவையற்றது எனவும் பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், போர் குற்றத்திற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விரைவில் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

ஆனால், போர் தற்போதுவரை நிற்கவில்லை. 34,000க்கும் அதிகமானவர்கள் இந்த போரில் உயிரிழந்துள்ளனர். இதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களும், குழந்தைகளும்தான். மட்டுமல்லாது போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.

இதற்கிடையில் போர் நிறுத்தம் கோரி ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் பாலஸ்தீன ஆதரவு நாடுகள் கொண்டு வரும் தீர்மானங்களை, அமெரிக்காவும், பிரிட்டனும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்து வருகிறது. எனவே இந்த போர் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் அபாயம் எழுந்திருக்கிறது.

இந்நிலையில் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போருக்கு எதிரான போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு அமெரிக்கா துணை போக கூடாது என்று மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 50க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராடும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை அந்நாட்டு காவல்துறை கைது செய்து வருகிறது. தற்போது வரை 550க்கும் அதிகமானோர் கைதாகியுள்ளனர்.

மாணவர் போராட்டம் லண்டன், பாரிஸ் என ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. சூழல் இப்படி இருக்கையில் ‘சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால்’ (ICC) போர் குற்றத்திற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விரைவில் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் மட்டுமல்லாது அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கல்லன்ட் மற்றும் ராணுவ தலைமை அதிகாரி ஹைம் ஹலிவி ஆகியோர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதற்கான கைது வாரண்ட் ஓரிரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் என்றும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்பது 90களில் உருவானது. போர் குற்றம், தீவிரவாதம், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட விவகாரங்களை இந்த நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த நீதிமன்றத்தில் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு மட்டுமே இந்நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு பொருந்தும் என்பதால் ஒரு சில நாடுகள் மட்டுமே இதில் உறுப்பினராக இருக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்த போது, ஒரு வழக்கில் அவருக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உடனே இந்த நீதிமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து அந்நாடு விலகிக்கொண்டது. மட்டுமல்லாது இந்நீதிமன்றத்தின் முக்கிய அதிகாரிகள் யாரும் அமெரிக்காவுக்குள் நுழைய கூடாது என்றும் உத்தரவை பிறப்பித்தது.

இப்படி இருக்கையில் தனது நட்பு நடான இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய கைது வாரண்ட்டை இந்நீதிமன்றம் விரைவில் பிறப்பிக்கப்பட இருப்பதை அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version