Home Top Story ரத்தக்கட்டு..வீக்கம்..நீலிக் கண்ணீர் வடிக்கும் ‘பொம்மை’ முதல்வர்! அறிக்கையில் அனல் காட்டிய எடப்பாடி

ரத்தக்கட்டு..வீக்கம்..நீலிக் கண்ணீர் வடிக்கும் ‘பொம்மை’ முதல்வர்! அறிக்கையில் அனல் காட்டிய எடப்பாடி

சென்னை: திருவள்ளூரில் விசாரணைக் கைதி சாந்தகுமார் காவல்நிலையத்தில் உயிரிழந்த நிலையில் அவரது உடற்கூறு ஆய்வு அறிக்கை நேற்று வெளியானது. அதில் அவரது உடலில் காயங்களும், ரத்தக்கட்டும் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் விசாரணைக் கைதியின் மரணத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் கடந்த ஆண்டு பாஜக பட்டியலினப் பிரிவு மாநிலப் பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள வளர்புரம் ஊராட்சி தலைவருமான பிபிஜிடி.சங்கர் மர்ம கும்பலால் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலரும், ரவுடியுமான சாந்தகுமார், வெள்ளவேடு ஜெகன், மண்ணூர் சூர்யா உள்ளிட்ட 22 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர்.

ரவுடி சாந்தகுமார்: இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் சாந்தகுமார் உள்ளிட்ட 6 பேர் மற்றும் மற்றொரு ரவுடியான சென்னை செல்வம் என 7 பேர் கடந்த வாரம் திருவள்ளூர் அருகே புட்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் துப்பாக்கியுடன் தங்கியிருப்பதாக செவ்வாப்பேட்டை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் அங்கு துப்பாக்கியுடன் இருந்த சாந்தகுமார், ஜெகன், சூர்யா, சஞ்சீவி, சரத்குமார், மற்றொரு சாந்தகுமார் மற்றும் செல்வம் ஆகிய 7 பேரைக் கைது செய்து, விசாரணைக்காக செவ்வாப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

லாக் அப் மரணம்: அவர்களிடம் செவ்வாப்பேட்டை காவல் ஆய்வாளர் பணியைக் கூடுதல் பொறுப்பாக மேற்கொண்ட நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் குணசேகரன், ஸ்ரீபெரும்புதூர் சாந்தகுமார் உள்ளிட்ட 7 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார். அப்போது, ஸ்ரீபெரும்புதூர் சாந்தகுமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், போலீஸார் அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையின் போது சாந்தகுமார் உயிரிழந்தார்.

பணியிடை நீக்கம்: இதுகுறித்து, தகவலறிந்த சாந்தகுமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். அவர்கள் சாந்தகுமாரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் குற்றம்சாட்டினர். தொடர்ந்து, அசம்பாவிதத்தை தவிர்ப்பதற்காக போலீஸார், சாந்தகுமாரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக நேற்று முன்தினம் இரவே சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் குணசேகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

உடற்கூறு ஆய்வு அறிக்கை: தொடர்ந்து சாந்தகுமாரின் உடற்கூறு ஆய்வு அறிக்கை நேற்று வெளியானது. அதில் அவரது உடலில் காயங்களும், ரத்தக்கட்டும் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் விசாரணைக் கைதியின் மரணத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

எடப்பாடி பழனிசாமி: விடியா திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் பொம்மை முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடும் கண்டனம்.

கண்டனம்: பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு இந்த விடியா அரசின் முதல்வரையும் வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version