கோலாலம்பூர்:
மலேசியாவையும் சிங்கப்பூரையும் இணைக்கும் ‘RTS Link’ ரயில் பாதையின் கட்டுமானம், ஜூலை நிலவரப்படி ஜோகூர் பாருவில் 83 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.
இந்த வழித்தடத்தின் மூலம் 2027 ஜனவரி 1ஆம் தேதி செயல்பாடுகளைத் தொடங்குவதை முன்னிட்டு, அந்த ரயில் பாதைக்கான கட்டுமானம் திட்டமிட்டபடி நடந்து வருவதாக அவர் சொன்னார்.
அதேநேரம் புக்கிட் சகாரில் குடிநுழைவு, சுங்கத்துறை, தனிமைப்படுத்தல் வளாகக் கட்டுமானமும் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
இந்நிலையில், இஸ்கந்தர் மலேசியா வட்டாரத்துக்கான போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டம் ஒன்றையும் தமது அமைச்சு மறுஆய்வு செய்து வருவதாக லோக் மேலும் தெரிவித்தார்.
ஜோகூர் பாருவைச் சுற்றியுள்ள உள்கட்டமைப்பு மேம்பாடுகளை இத்திட்டம் மெருகூட்டும் அதேநேரம், ஜோகூர் பாருவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இது ஒட்டுமொத்த போக்குவரத்து நிலவரத்தை மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை.















