நெகிரி செம்பிலான் அரச விவகாரத்தில் பரபரப்பு: துங்கு நட்சருடின் பிரகடனம் ஆவணப்படுத்தப்பட மாட்டாது என மாநிலச் செயலாளர் அதிரடி அறிவிப்பு!

கோலாலம்பூர்:

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நிலவி வரும் அரசப் பிரச்சனை தொடர்பாக, துங்கு நட்சருடின் துங்கு ஜாஃபரை புதிய யாங் டி-பெர்த்துவான் பெசாராகப் பிரகடனப்படுத்தும் அறிவிப்பை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஆவணப்படுத்தவோ அல்லது நடைமுறைப்படுத்தவோ மாட்டோம் என மாநிலச் செயலாளர் டத்தோ முகமட் சாஃபிர் இப்ராஹிம் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அட்டர்னி ஜெனரல் அலுவலகம் (AGC) மற்றும் மாநிலச் சட்ட ஆலோசகரிடமிருந்து பெறப்பட்ட அதிகாரப்பூர்வ சட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

மாநிலச் செயற்குழு உறுப்பினர்களுக்கு (EXCO) இதுபோன்ற அரச பிரகடன விவகாரத்தில் முடிவெடுக்கச் சட்டப்பூர்வமான அதிகாரமோ அல்லது மாநில அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உரிமையோ இல்லை என்பதை அட்டர்னி ஜெனரல் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதியிட்ட அந்தப் பிரகடனத்திற்கு எந்தவொரு சட்டப்பூர்வ அடிப்படையும் இல்லை. அதனைச் செயல்படுத்துவது மாநில அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் முரணானது ” என்று மாநிலச் செயலாளர் டத்தோ முகமட் சாஃபிர் இப்ராஹிம் கூறினார்.

முன்னதாக, மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் வெளியிட்ட அறிவிப்பை ஏற்றுக்கொண்டதாக மாநிலச் செயற்குழு அறிவித்திருந்தது. இருப்பினும், அந்தப் பிரகடனத்திற்குச் செல்லுபடித் தன்மை இல்லை என்று மாநிலச் செயலாளர் அலுவலகம் உறுதியாக மறுத்துள்ளதுடன், அதனை நடைமுறைப்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here