ரெம்பாவ் பகுதியில் வெள்ள நீரில் கார் அடித்துச் செல்லப்பட்டதில் முதியவர் உயிரிழப்பு

சிரம்பான்: ரெம்பாவ், சுங்கை கம்போங் குந்தூர் உலு  அருகே உள்ள சாலையில், தான் ஓட்டிச் சென்ற பெரோடுவா மைவி (ரக கார் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டதில், 74 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.  ரெம்பாவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் மூத்த செயல்பாட்டுத் தளபதி கைருல் யஹாயா கூறுகையில், பாதிக்கப்பட்டவரின் மகன் இரவு 9.20 மணிக்கு அவசர உதவி கோரி அழைப்பு விடுத்ததாகத் தெரிவித்தார்.

மீட்புக் குழுவினர், தெலுக் கெமாங் (Teluk Kemang) நிலையத்தைச் சேர்ந்த நீர் மீட்புக் குழுவினரின் உதவியுடன், காருக்குள் சிக்கியிருந்த நபரை அரை மணி நேரத்திற்குப் பிறகு மீட்டனர். ஓய்வுபெற்ற அரசு ஊழியரான அவர், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை சுகாதார அமைச்சக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அவரது உடல் ரெம்பாவ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது என்று அவர் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். 13 பணியாளர்கள் ஈடுபட்ட இந்த மீட்புப் பணி, இரவு 10 மணிக்கு நிறைவடைந்தது.

மற்றொரு சம்பவத்தில், பெடாஸ்-லிங்கி சாலை, கம்போங் குந்தூர் தெங்கா பகுதியில் திடீர் வெள்ளத்தின் போது பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு, மரங்களுக்கு இடையே சிக்கியிருந்த 38 வயது இந்தோனேசிய நபர் ஒருவரைத் தங்கள் குழுவினர் மீட்டதாக கைருல் தெரிவித்தார். மீட்புப் பணியாளர்கள் மனிதச் சங்கிலியை உருவாக்கி, இரவு 8.40 மணியளவில் அந்த நபரை ஆற்றங்கரத்திற்குக் கொண்டு வந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here