டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ. 6.40 கோடி நிதியுதவி வழங்கும் இந்தியா…

கொழும்பு, இலங்கையில் கடந்த ஆண்டு வீசிய ‘டித்வா’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை தொடர்ந்து, அங்கு மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக இலங்கை மதிப்பில் ரூ.22.5 கோடியை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.6.40 கோடி) நிதியுதவியாக வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

ஜெ.பி.நட்டா சந்திப்பு
இந்தியா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட 7 நாடுகள் அங்கம் வகிக்கும் ‘பிம்ஸ்டெக்’ (BIMSTEC) அமைப்பின் சுகாதார மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜெ.பி.நட்டா இலங்கை தலைநகர் கொழும்பு சென்றார்.

இலங்கைக்கு நிதியுதவி
அங்கு அவர் இலங்கை சுகாதாரத்துறை மந்திரி நலிந்த ஜெயதிஸ்ஸவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பை தொடர்ந்து, இலங்கைக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

100 ஆம்புலன்சுகள்
முன்னதாக, இலங்கையின் அவசரகால மருத்துவ சேவையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 52.8 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.50 கோடி) நிதியுதவியுடன், கூடுதலாக 100 ஆம்புலன்சுகளை வழங்குவதற்கான புதிய ஒப்பந்தம் கடந்த புதன்கிழமை அன்று இந்தியா மற்றும் இலங்கை இடையே கையொப்பமானது.

22 லட்சம் பேர் பாதிப்பு
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ புயல் காரணமாக 600-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here