வாகனம் நிறுத்துவதில் தகராறு! நடுரோட்டில் சண்டை – இருவர் கைது!

கோலாலம்பூர்,

கோலாலம்பூர், தாமான் கொனாட் (Taman Connaught) பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் முன்பாக வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு, பலர் பங்கேற்ற சண்டையாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி மொகமட் ரோஸ்டி தாவுட் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாகப் புகார் கிடைத்ததைத் தொடர்ந்து, செராஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர்.

இதையடுத்து, இன்று அதிகாலை 5 மணியளவில் கோலாலம்பூர், தாமான் லென் செங்கில் உள்ள ஜாலான் 9 பகுதியில் இரு சீன இன ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 30 வயது உள்ளவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் தலை மற்றும் முகப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டிருந்ததால், மருத்துவச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனிடையே, சம்பவ இடத்திலிருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகளை ஆய்வு செய்ததில், இந்தக் சண்டையில் மேலும் சிலர் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மோதலின்போது இரும்புக் கம்பி ஒன்று ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணைக்காக இன்று முதல் நவம்பர் 23ஆம் தேதி திங்கட்கிழமை வரை நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆயுதம் அல்லது ஆபத்தான பொருளுடன் கலவரத்தில் ஈடுபடுவது தொடர்பான தண்டனைச் சட்டத்தின் 148ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் மேலும் சிலரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here