புதினுடன் செல்பி எடுத்துக்கொண்ட 17 வயது இந்திய இளைஞர்: குவியும் பாராட்டுகள்…

மாஸ்கோ, ரஷியா அதிபர் விளாடிமிர் புதினுடன் 17 வயது இந்திய இளம் தொழில்முனைவோர் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏஐ ஜர்னி மாநாடு
ரஷியா தலைநகர் மாஸ்கோவில் நவம்பர் 26 முதல் 28-ஆம் தேதி வரை ‘ஏஐ ஜர்னி’ என்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாடு நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய அமர்வில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் ஆகியோர் நேரில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதில் இந்தியா,ரஷியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர்.

புதினுடன் செல்பி
இந்த மாநாட்டில், கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஏஐ ரியல்ம் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனரும், 17 வயது இளம் தொழில்முனைவோருமான ராகுல் ஜான் அஜு கலந்துகொண்டார். மாநாட்டின்போது ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு ராகுலுக்கு கிடைத்தது. அப்போது, அதிபர் புதினுடன் செல்பி எடுத்துக்கொள்ள ராகுல் விருப்பம் தெரிவித்த நிலையில், புதினும் புன்னகையுடன் சம்மதம் தெரிவித்து போஸ் கொடுத்தார்.

ஏஐ கிட்
‘இந்தியாவின் ஏஐ கிட்’ என அழைக்கப்படும் ராகுல் ஜான் அஜு, இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். “சிறுவயதில் பொழுதுபோக்கிற்காக வீடியோக்களை உருவாக்கி கொண்டிருந்த நான், 17 வயதில் அதிபர் புதினை சந்திப்பேன் என கனவில்கூட நினைத்ததில்லை. வாழ்க்கை எனக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இன்னும் கற்றுக்கொள்ளவும் சாதிக்கவும் நிறைய இருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய தூதரகம்
சட்ட தகவல்களை எளிமைப்படுத்தும் ‘புராஜெக்ட் 47எக்ஸ்’, ‘திங்க்கிராப்ட்’ , ‘நியாயசாதி’உள்ளிட்ட பல ஏஐ தளங்களை ராகுல் உருவாக்கியுள்ளார். இந்நிலையில், ரஷியா அதிபர் புதினுடன் இந்திய மாணவர் ராகுல் ஜான் அஜு எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை இந்தியாவிற்கான ரஷ்ய தூதரகமும் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி, ராகுலுக்கு பாராட்டுகளை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here