ரஷ்யாவின் முன்னாள் நெருங்கிய கூட்டாளியான ஆர்மீனியாவும், அமெரிக்காவும் சிவில் அணுசக்தி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளன. பிரதமர் நிகோல் பாஷினியன் மற்றும் ஆர்மினியா சென்றுள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
“123 ஒப்பந்தம்” என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம் அமெரிக்க அணுசக்தி தொழில்நுட்பம், எரிபொருள் மற்றும் உபகரணங்களை அர்மீனியாவிற்கு சட்டப்பூர்வமாக ஏற்றுமதி செய்ய வழிவகை செய்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அர்மீனியாவிற்கு சுமார் $5 பில்லியன் மதிப்பிலான ஆரம்ப ஏற்றுமதிகளும், கூடுதலாக $4 பில்லியன் மதிப்பிலான நீண்டகால பராமரிப்பு மற்றும் எரிபொருள் விநியோக ஒப்பந்தங்களும் கிடைக்கும் என ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் “நாங்கள் ஆர்மீனியாவிற்கு அமைதியை மட்டும் ஏற்படுத்தவில்லை; ஆர்மீனியாவும் அமெரிக்காவும் இணைந்து உண்மையான செழிப்பை அடைவதற்கான சூழலையும் உருவாக்குகிறோம்,” என்றும் தெரிவித்துள்ளார்.
தனது எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இதுவரை ரஷ்யா மற்றும் ஈரானை சார்ந்திருந்த ஆர்மீனியா, தற்போது ஒரு புதிய அணு உலை அமைப்பதற்காக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் தென் கொரிய நிறுவனங்களிடமிருந்து வந்துள்ள முன்மொழிவுகளைப் பரிசீலித்து வருகிறது. இதன்மூலம் மெட்சாமரில் உள்ள பழைய ரஷ்ய தயாரிப்பு அணுமின் நிலையத்திற்குப் பதிலாக புதிய அணுமின் நிலையங்கள் அமைக்கப்படும். தெற்கு காகசஸ் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் ரஷ்யாவுக்கு இது பெரும் பின்னடைவாக அமையும்.
ஒரு குறிப்பிட்ட நாட்டை மட்டும் சாராமல், பல்வேறு நாடுகளுடன் உறவை ஏற்படுத்திக் கொள்வது அரசியல் ரீதியாக முக்கியமானது என ஒப்பந்தம் தொடர்பாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மறுபக்கம் ரஷ்யாவின் தொழில்நுட்பம் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டது என்பதால், அமெரிக்காவின் புதிய தொழில்நுட்பங்களை விடத் தங்களது திட்டமே சிறந்தது என ரஷ்யா வாதிடுகிறது.










