ராஜஸ்தானில் 40 பங்களாக்களை வாங்கிய ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் தம்பதி; வெளியான அதிர்ச்சி தகவல்…

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலத்தில் சொகுசு ஓட்டல் நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டு, சந்தை மதிப்பை விட மிக குறைந்த விலைக்கு 40 சொகுசு பங்களாக்களை வாங்கியதாக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரி தம்பதி மீது ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணையை தொடங்கியுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டு
ராஜஸ்தானில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வரும் ஷிகர் அகர்வால் மற்றும் அவரது மனைவியான ஐ.பி.எஸ். அதிகாரி பிரஷாகா மாத்தூர் ஆகியோர் மீதுதான் இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ரூ.6 கோடிக்கு 40 சொகுசு வில்லாக்கள்
உதய்பூர் மற்றும் அல்வார் ஆகிய சுற்றுலாத் தலங்களில் ஓட்டல்கள் மற்றும் வில்லாக்களை நடத்தி வரும் ஒரு முன்னணி தனியார் நிறுவனத்திடம் இருந்து, இந்த தம்பதியின் குடும்பத்தினர் 40 சொகுசு வில்லாக்கள் மற்றும் காட்டேஜ்களை வாங்கியுள்ளனர். உதய்பூரின் புஜ்தா பகுதியில் 20 காட்டேஜ்களும், அல்வாரின் அஜாப்கர் பகுதியில் 20 வில்லாக்களும் ரூ.6.16 கோடிக்கு அந்த நிறுவனத்திடமிருந்து நேரடியாக வாங்கப்பட்டுள்ளன.

குறைந்த விலை
இவை அனைத்தும் தற்போதைய சந்தை மதிப்பை விட மிக மிக குறைந்த விலைக்கு வாங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த சொத்துக்கள் அனைத்தும் ஐ.ஏ.எஸ் அதிகாரி, அவரது மனைவி, இவர்களது மகன்கள் மற்றும் பிரஷாகா மாத்தூரின் பெற்றோர் ஆகியோரின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைமாறிய உடனே வாடகை ஒப்பந்தம்
சுவாரசியமான விஷயமாக, இந்த சொத்துகளை வாங்கிய உடனேயே, அவை அனைத்தும் மீண்டும் அதே தனியார் நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த தம்பதிக்கு ஆண்டுக்கு ரூ.1.80 கோடி வாடகையாக அளிக்கப்படும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அதிகார துஷ்பிரயோகம்
ஷிகர் அகர்வால் உதய்பூர் மாவட்ட கலெக்டராகவும், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராகவும், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். அந்த காலகட்டத்தில், சம்பந்தப்பட்ட தனியார் ஓட்டல் நிறுவனத்திற்கு கட்டுமான விதிமுறைகளில் சலுகைகள், முறையற்ற அனுமதிகள் மற்றும் சிறப்பு நிதிச் சலுகைகளை அள்ளி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிறப்பு நிதி சலுகை
கடந்த மார்ச் 27-ஆம் தேதி அல்வார் ரிசார்ட்டில் 20 வில்லாக்கள் இந்த தம்பதியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட அதே நாளில், அந்த நிறுவனத்திற்கு அரசு தரப்பில் இருந்து சிறப்பு நிதி சலுகை வழங்கப்பட்டதையும் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சொத்து விவரத்தில் ஏமாற்று வேலை
இந்த தம்பதியினர் இந்த ஆண்டு தாக்கல் செய்த அதிகாரப்பூர்வ சொத்து விவரங்களில், ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷிகர் அகர்வால் தனக்கு 14 சொத்துக்கள் மட்டுமே இருப்பதாகக் காட்டியுள்ளார். அவரது மனைவியான ஐ.பி.எஸ் அதிகாரி பிரஷாகா மாத்தூரோ, தனக்கு சொந்தமாக எந்தவொரு சொத்தும் இல்லை என்று கணக்கு காட்டியிருந்தது தற்போது அம்பலமாகியுள்ளது.

காத்திருப்பு பட்டியல்
சொத்துக்களை வாங்குவதற்கான கோடிக்கணக்கான பணம் எங்கிருந்து வந்தது? தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினார்களா? என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, முறைகேடு புகாரில் சிக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷிகர் அகர்வால், அவரது மனைவி பிரஷாகா மாத்தூர் ஆகிய இருவரையும் ராஜஸ்தான் அரசு கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here