கெப்பொங்கில் நடந்த கத்தி குத்து தாக்குதல்: காவலரின் கை துண்டிப்பு

கெப்பொங்கில் உள்ள டேசா அமான் புரி (Desa Aman Puri) குடியிருப்புப் பகுதியில், வெளிநாட்டவர் ஒருவர் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் காவலர் ஒருவரின் வலது கை துண்டிக்கப்பட்டது. சிலாங்கூர் காவல் துறைத் தலைவர் ஷசெலி கஹார் (Shazeli Kahar) கூறுகையில், மனநிலை சரியில்லாத நபர் ஒருவர் ஆக்ரோஷமாகச் செயல்படுவதாக நேற்று பிற்பகல் 4 மணிக்கு பொதுமக்களிடமிருந்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, மற்றும் சுகாதார அமைச்சகத்தைச் சேர்ந்த குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அவர்கள் கதவைத் திறந்தபோது, ​​சந்தேக நபர் இரு கத்திகளைக் கொண்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார். இதில், கோம்பாக் மாவட்ட காவல் தலைமையகத்தின் நடமாடும் ரோந்துப் பிரிவைச் சேர்ந்த 26 வயது காவலர் (லான்ஸ் கார்போரல்) ஒருவரின் கை துண்டிக்கப்பட்டது. மேலும், அவரது தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. சில தீயணைப்பு வீரர்களும் சுகாதார அமைச்சகப் பணியாளர்களும் கூட சிறிய காயங்களுக்கு உள்ளாகினர். அங்கிருந்து தப்பி ஓடிய சந்தேக நபர், இரவு 8 மணியளவில் அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் கண்டறியப்பட்டார் என்று நேற்று இரவு செலாயாங் மருத்துவமனையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஷசெலி தெரிவித்தார்.

தன்னைக் கைது செய்ய முயன்ற காவலர்கள் மீது சந்தேக நபர் கத்தியால் தாக்குதல் நடத்தியதால், அவர்கள் அவரை நோக்கிச் சில முறை துப்பாக்கியால் சுட்டனர் என்று ஷசெலி கூறினார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அந்தச் சந்தேக நபர் உயிரிழந்தார். காயமடைந்த காவலர் முதலில் செலாயாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அறுவை சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here