பாசீர் கூடாங் மருத்துவமனையில் நிலவும் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறைக்குத் தீர்வு காணும் வகையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்று ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபீஸ் காஸி வலியுறுத்தியுள்ளார். ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாயிலின் உத்தரவுக்கு ஏற்ப, மாநில மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சுகாதாரத் துறையை மேலும் வலுப்படுத்துவதில் மாநில அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார்.
பாசீர் கூடாங் மருத்துவமனைக்கு நேரில் சென்று அதன் செயல்பாடுகளைப் பார்வையிட்ட அவர், அங்கு புதிய வார்டுகள் திறக்கப்படுவது, மருத்துவ வசதிகள், பணியாளர் நியமனங்கள் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிந்தார்.304 படுக்கை வசதிகளைக் கொண்ட இம்மருத்துவமனையில் கடந்த நவம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி 239 படுக்கைகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இது மொத்த படுக்கைகளில் 79 விழுக்காடாகும். எஞ்சிய படுக்கைகளையும் படிப்படியாகப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மருத்துவமனையை முழுத் திறனுடன் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையில் போதிய பணியாளர்கள் இல்லாதது முக்கியப் பிரச்சினையாக இருப்பதாக ஓன் ஹபீஸ் சுட்டிக்காட்டினார்.கடந்த நவம்பர் 6ஆம் தேதி நிலவரப்படி, மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட 2,271 பணியிடங்களில் 1,276 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. அதாவது 56 விழுக்காடு பணியிடங்களில்தான் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.குறிப்பாக, செவிலியர் பணியிடங்களில் 40 விழுக்காடும், மருத்துவ நிபுணர்களுக்கான பணியிடங்களில் 39 விழுக்காடும் மட்டுமே நிரப்பப்பட்டிருப்பது கவலையளிப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாகச் சுகாதார அமைச்சருடனான சந்திப்புகளின்போது தாம் பலமுறை பேசியிருப்பதாகவும், மருத்துவமனைக்குத் தேவையான பணியாளர்களை விரைவில் நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.இதற்கிடையே, மருத்துவமனையின் அன்றாடப் பணிகள் தடையின்றி நடைபெறுவதற்கு உதவும் வகையில் மாநில அரசின் முழு நிதியுதவியுடன் சதர்ன் வாலண்டியர்ஸ் சுகாதாரத் தன்னார்வலர் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைப்பதோடு அவர்களின் நலனையும் கவனித்துக் கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.பாசீர் கூடாங் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு முழுமையான மருத்துவச் சேவைகள் கிடைக்க வேண்டுமானால், மருத்துவமனையில் போதிய பணியாளர்கள் இருப்பது அவசியமாகும். எனவே, காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கும் சுகாதாரப் பணியாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்கும் மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று ஓன் ஹபீஸ் கூறினார்.
கோகி கருணாநிதி













