ராஜஸ்தான் ரெயில் தண்டவாள குண்டுவெடிப்பு: பாகிஸ்தான் தொடர்புடைய 2 பேர் கைது…

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் ரெயில் தண்டவாளத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ரெயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் மாவட்டம் ராம்சிங்பூர் பகுதிக்கு உட்பட்ட 50 ஜி.பி. கிராமம் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் கடந்த நவம்பர் 3-ந்தேதி இரவு 9.45 மணியளவில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் தண்டவாளத்தின் 2 கான்கிரீட் சிலீப்பர்கள் உடைந்து சேதமடைந்தன. மேலும் தண்டவாள பகுதியில் சுமார் 2.5 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.

இந்த குண்டுவெடிப்பு நிகழ்வதற்கு சுமார் 45 முதல் 75 நிமிடங்களுக்கு முன்புதான் அனுப்கர்-சூரத்கர் பயணிகள் ரெயில் அந்த தண்டவாளத்தை கடந்து சென்றிருந்தது. இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இளம்பெண் உட்பட இருவர் கைது
பயணிகள் ரெயிலை குறிவைத்து மிகப்பெரிய நாசவேலைக்கு சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து ராஜஸ்தான் பயங்கரவாத தடுப்புப் படை, ஸ்ரீ கங்காநகர் போலீசார் மற்றும் பஞ்சாப் போலீசார் இணைந்து தீவிர விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகாக்தீப் கவுர் (வயது 21) மற்றும் தவிந்தர் சிங் (வயது 22) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பு
கைதான மகாக்தீப் கவுரின் முன்னாள் கணவர் கரண்வீர் சிங் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஏற்கனவே பஞ்சாப் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனியாக வசித்து வந்த மஹக்தீப் கவுரை, பாகிஸ்தானில் உள்ள ‘ஷா’ மற்றும் ‘சாச்சா’ ஆகிய மர்ம நபர்கள் சமூக வலைதளம் மூலமாக தொடர்பு கொண்டுள்ளனர். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகளான அவர்கள், மஹக்தீப் கவுரை காதல் வலையில் வீழ்த்தியும், பண ஆசை காட்டியும் இந்த நாசவேலைக்கு பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்
கைது செய்யப்பட்ட மஹக்தீப் கவுரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 2 கைத்துப்பாக்கிகள், 46 தோட்டாக்கள் மற்றும் குண்டுவெடிப்புக்காக பெறப்பட்ட பணத்தில் மீதமிருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here