கோலாலம்பூர்,
மலேசிய ஊழியர் சேமநிதி வாரியத்தின் (EPF/KWSP) முதலீட்டு வருமானம் 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 30 விழுக்காடு அதிகரித்து RM83.32 பில்லியனாக (RM8,332 கோடி) பதிவாகியுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் RM63.99 பில்லியனாக இருந்த முதலீட்டு வருமானம், இவ்வாண்டு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக EPF இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மட்டும் முதலீட்டு வருமானம் RM25.82 பில்லியனாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் பதிவான RM25.07 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 3 விழுக்காடு அதிகமாகும்.
EPF தலைமைச் செயல்முறை அதிகாரி அஹ்மட் சுல்கர்னைன் ஒன் கூறுகையில், பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளும் முந்தைய காலாண்டுகளில் பின்பற்றப்பட்ட முதலீட்டு உத்திகளும் இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
எனினும், உலகளாவிய பங்குச் சந்தைகளில் காணப்படும் பலவீனம், கடன்பத்திரச் சந்தைகளில் அதிகரிக்கும் வருவாய் விகிதங்கள் மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால், நான்காவது காலாண்டிலும் முதலீட்டு வருமான வளர்ச்சி மெதுவடையக்கூடும் என அவர் எச்சரித்தார்.
மூன்றாவது காலாண்டில் பங்குச் சந்தை முதலீடுகள் மூலம் RM17.41 பில்லியன் வருமானம் கிடைத்துள்ளது. இது அந்தக் காலாண்டின் மொத்த முதலீட்டு வருமானத்தில் 67 விழுக்காடாகும்.
அதேவேளை, நிலையான வருமான முதலீடுகள் மூலம் RM7.12 பில்லியனும், சொத்துகள் மற்றும் உள்கட்டமைப்பு முதலீடுகள் மூலம் RM890 மில்லியனும், பணச் சந்தை முதலீடுகள் மூலம் RM400 மில்லியனும் வருமானமாகப் பெறப்பட்டுள்ளன.
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி, EPF-இன் மொத்த முதலீட்டுச் சொத்துகளின் மதிப்பு RM1.55 டிரில்லியனாக உயர்ந்துள்ளது. இதில் 38 விழுக்காடு வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு முதலீடுகள் மூன்றாவது காலாண்டில் மட்டும் RM13.68 பில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளன. இது அந்தக் காலாண்டின் மொத்த முதலீட்டு வருமானத்தில் 53 விழுக்காடாகும்.
இதனிடையே, EPF உறுப்பினர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சுமார் 6 இலட்சத்து 59 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் பதிவு செய்துள்ள நிலையில், மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடியே 86 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதில் 1 கோடியே 12 இலட்சம் பேர் செயலில் உள்ள உறுப்பினர்களாக உள்ளனர். மேலும், செயலில் உள்ள முதலாளிகளின் எண்ணிக்கை 646,686 ஆக அதிகரித்துள்ளது.
2026ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் உறுப்பினர்களின் மொத்த பங்களிப்புத் தொகை 9.34 விழுக்காடு அதிகரித்து RM30.44 பில்லியனாகப் பதிவாகியுள்ளது.
அத்துடன், முதல் ஒன்பது மாதங்களில் உறுப்பினர்கள் தாமாக முன்வந்து செலுத்திய கூடுதல் சேமிப்புத் தொகை RM18.27 பில்லியனாக உயர்ந்துள்ளது.
உறுப்பினர்களின் நீண்டகால ஓய்வூதியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், முதலீட்டு வாய்ப்புகளையும் உலகளாவிய பொருளாதார அபாயங்களையும் கவனமாகக் கையாள்வதாக EPF தெரிவித்துள்ளது.























