சபா பான் போர்னியோ நெடுஞ்சாலைத் திட்டத்தில் தாமதம்! ஊழல் தடுப்பு ஆணையத்துடன் நாடாளுமன்றக் குழு விசாரணை!

கோலாலம்பூர், 

சபா மாநிலத்தில் பான் போர்னியோ நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் தாமதமடைந்துள்ள விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (PAC) அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கவுள்ளது.

இந்த விசாரணையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் (MACC) பங்கேற்கவுள்ளதாகப் பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் டத்தோ மாஸ் எர்மியாத்தி சம்சுடின் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அடுத்த புதன்கிழமை தொடங்கவுள்ள விசாரணைக்கு பொதுப்பணித் துறை அமைச்சு மற்றும் சபா மாநில பொதுப்பணித் துறையைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் அழைக்கப்படுவார்கள் என்று கூறினார்.

திட்டத்தில் முறைகேடுகள் அல்லது அதிகாரத் துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து விசாரணையின்போது ஆராயப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

விசாரணையில் பெறப்படும் தகவல்கள் மற்றும் சாட்சியங்களை முழுமையாக ஆராய்வதற்கு ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளதாகவும், முறைகேடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாகச் சட்ட நடவடிக்கைக்காகப் பரிந்துரைக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

2026ஆம் ஆண்டுக்கான தலைமை கணக்காய்வாளர் அறிக்கையின் இரண்டாவது தொடரில், சபா பான் போர்னியோ நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதற்கட்ட நிர்வாகம் தொடர்பாக எழுப்பப்பட்ட விவகாரங்களைத் தொடர்ந்து இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

இதனிடையே, திட்டப் பணிகள் கடுமையாகத் தாமதமடைந்துள்ள பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சபா மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பொதுக் கணக்குக் குழு நேற்று 90 நிமிடங்கள் மூடிய கதவு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது.

நிதி நடைமுறைகளை மீறுதல் அல்லது அதிகாரத் துஷ்பிரயோகம் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் எந்தவித சமரசமும் செய்யப்படாது என்று மாஸ் எர்மியாத்தி எச்சரித்தார்.

திட்டத் தோல்விகளுக்குப் பொறுப்பானவர்கள் உரிய விளக்கமளிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த விசாரணையில் முதன்முறையாகச் சபா மாநில பொதுக் கணக்குக் குழுவையும் இணைந்து பங்கேற்க அழைக்கவுள்ளதாக நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here