சிப்பாங்,
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (KLIA) துணைக் கட்டடத்தில் ஜன்னல் சட்டத்தின் மீது ஏறி பரபரப்பை ஏற்படுத்திய 50 வயது நேபாள ஆடவர் ஒருவர், மனநல சிகிச்சைக்காக காஜாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 4.56 மணியளவில் அனைத்துலகப் புறப்பாட்டுப் பகுதியின் G6 நுழைவாயிலுக்கு அருகே அந்த ஆடவர் கூச்சலிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக KLIA மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எம். ரவி தெரிவித்தார்.
இதனையடுத்து, விமான நிலையப் பாதுகாப்புப் பணியாளர்கள் அவரைச் சமாதானப்படுத்தி, முதலாவது முனையத்திலுள்ள போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
நேற்று மாலை 6 மணிக்கு அவர் நேபாளத்திற்குப் புறப்படவிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த சில மாதங்களாக மனநலப் பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்த அவர், சிகிச்சை பெற மறுத்து வந்ததாக அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட ஆடவர் மேலதிக சிகிச்சைக்காக காஜாங் மருத்துவமனையின் மனநலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் குறித்து நேபாளத் தூதரகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இச்சம்பவம் தொடர்பாக ஊகங்களையும் தவறான தகவல்களையும் பரப்ப வேண்டாம் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.















