பதற வைக்கும் ஐசியூ!
நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் இருக்கும் தீவிரக் கண்காணிப்பு சிகிச்சைபை் பிரிவுகளில் (ஐசியூ) கோவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் புகைப்படங்களை மலேசிய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
இது பொதுமக்களுக்குச் சுகாதார அமைச்சு நேரடியாக வெளியிடும் ஓர் எச்சரிக்கை. கொரோனா தொற்றுக்கிருமிக்கு எதிரான போரில் அரசாங்கம் பொதுமக்களின் பங்கேற்புக்குத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மக்களின் பங்கேற்பும் ஒத்துழைப்பும் இன்றி அரசாங்கத்தால் இந்தப் போரில் வெற்றிபெற முடியாது என்பது நிதர்சனம். மக்களின் அலட்சியம் சர்வ நாசம் என்பதும் தற்போது நிரூபிக்கப்பட்டு வருகிறது.
ஐசியூ வார்டுகளில் அதன் பயன்பாடு உச்சப்பட்ச அளவை எட்டியிருக்கிறது. சில மருத்துவமனைகளில் இடமே இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது.
ஐசியூ வார்டின் இன்றைய நிலைமையைத் தெள்ளத் தெளிவாக காட்டும் புகைப்படங்களைப் பார்த்தாவது பொதுமக்கள் விழிப்புணர்வு பெறுவர்; தரமான ஒத்துழைப்பை வழங்குவர் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது – நம்புகிறது.
காஜாங் மருத்துவமனையில் உள்ள எல்லா ஐசியூ படுக்கைகளும் நோயாளிகளால் நிறைந்துவிட்டன. இனி இடம் இல்லை என்ற எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கிவிட்டது.
அம்பாங், செலாயாங், சுங்கை பூலோ, மேலும் இதர கோவிட்-19 மருத்துவமனைகளிலும் இதே நிலைதான். இங்கு நிலைமை நெருக்கடி நிலையை எட்டிவிட்டது.
யாருக்கு ஐசியூ படுக்கை என்று தேர்வு செய்திடும் ஓர் அபாயகர நிலையைத் தவிர்ப்பதற்கு சுகாதார அமைச்சும் மருத்துவமனை முன்களப் பணியாளர்களும் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கு மருத்துவமனை முன்களப் பணியாளர்கள் பெருநாள் விடுமுறைகளையும் தியாகம் செய்துவிட்டு முழு வீச்சில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களைக் காப்பாற்றுவதற்கு அவர்கள் ஆற்றும் பணி வெறும் வார்த்தைகளால் சொல்லி முடித்துவிட முடியாது.
மலேசியர்களிடம் அவர்கள் மன்றாடிக் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். கோவிட்-19 விதிமுறைகளைக் கடைப்பிடியுங்கள். உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நமது குடும்பத்தையும் பாதுகாப்போம்.
இந்த ஐசியூ வார்டுக்கு நம் குடும்பத்தைச் சேர்ந்த எவரும் வந்துவிடக்கூடாது என்பதை உறுதிசெய்யுங்கள்.
உண்மையிலேயே ஐசியூ வார்டுகளின் காட்சிகள் நமது ஈரக் குலையை உறைய வைக்கின்றன. இனம் புரியாத பயமும் கவ்விக் கொள்கின்றது.
யார் வாழ வேண்டும் – யார் சாக வேண்டும் என்பதை முடிவுசெய்ய வேண்டிய ஒரு கொடிய நிலையை நாம் உருவாக்கிவிடக் கூடாது.
மலேசியாவில் தற்போது 734 ஐசியூ படுக்கைகள் உள்ளன. கோவிட்-19 தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால் 1,700க்கும் அதிகமான படுக்கைகள் தேவையாக இருக்கும் என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கடந்த மே 11ஆம் தேதி அறிவித்தார்.
மிகவும் ஆபத்தான நிலையில் இந்த ஐசியூ படுக்கையில் கொண்டு வந்து சேர்க்கப்படுபவர்கள் உங்களுக்கு அறிமுகமானவரின் அப்பாவாக, அம்மாவாக, சகோதரனாக, தங்கையாக, நெருங்கிய நட்பாக இருக்கலாம்.
நமக்கு மட்டும் அல்ல. நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் இப்படி ஒரு கொடூரம் நடந்துவிடக்கூடாது. நம்மையும் பாதுகாத்துக் கொண்டு நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் பாதுகாப்போம்.
கோவிட்-19 தொற்றுக்கிருமிக்கு எதிரான போரில் அமல்படுத்தப்பட்டிருக்கும் எல்லா விதிமுறைகளையும் சரியாகக் கடைபிடிப்பதில் உறுதியாக இருங்கள்.
-பி.ஆர் .ராஜன்