பி.எஸ்.எம். : பி.என். 60 ஆண்டுகள் கையாண்ட சூட்சமத்தை, பி.எச். ஓராண்டில் கற்றுக்கொண்டது

பலவீனமான நமது மக்களை, மேலும் பிளவுபடுத்த வேண்டும், அவர்களிடையே வெறுப்புணர்வைத் தூண்ட வேண்டும் எனும் தனது நோக்கத்தை, மதப் போதகர் ஸாகிர் நாயக் வெற்றிகரமாக நிறைவேற்றி வருவதாகத் தெரிகிறது. சில காலமாக மலேசிய இந்தியர்களின் கோபத்தைச் சம்பாதித்து வந்தவர், தற்போது சீனர்களை இலக்காகக் கொண்டு, தனது இழிவான கருத்துகளைத் திசை திருப்பியுள்ளார் என மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

மலேசிய சீனர்களும் இங்கு விருந்தினர்களாக வந்தவர்கள்தான் என்றும், அவரை (ஜாகிர் நாயக்) இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று சீனர்கள் விரும்பினால், சீனர்களையும் திரும்பிச் செல்லும்படி கேட்க வேண்டும் என்றும் ஸாகிர் நாயக் பேசியதை மேற்கோள்காட்டி, பி.எஸ்.எம். தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம் அவ்வாறு கூறியுள்ளார்.

ஸாகிர் நாயக் அறியாமையில் இவ்வாறெல்லாம் பேசவில்லை என சிவராஜன் குறிப்பிட்டுள்ளார்.

“சமீபத்தில் அவருக்கு நிரந்தர குடியிருப்பாளர் (பி.ஆர்.) அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஸாகிர் நாயக், மலேசிய வரலாற்றை அறியாமல் அவ்வாறு பேசவில்லை. அவர் நம் நாட்டை இனம் மற்றும் மத ரீதியில் பிளவுபடுத்த வேண்டும் என்று சிறப்பாகச் செயல்படுகிறார்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“பாஸ் தலைமையிலான கிளாந்தான் அரசாங்கத்திடமிருந்து அவருக்குக் கெளரவ வரவேற்பு கிடைத்ததில் ஆச்சரியமில்லை, காரணம், தனது மத மற்றும் அரசியல் திட்டங்களைச் செயல்படுத்த, ஜாகிர் நாயக் போன்றவர்கள் பாஸ் கட்சிக்குத் தேவைப்படுகிறார்கள்.

“ஆனால், பக்காத்தான் ஹராப்பானில் (பி.எச்.) இருக்கும் சில மிதப்போக்குடைய முஸ்லீம் தலைவர்களும் கூட அதற்கு ஒத்தூதுவதைப் பார்க்கும்போது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது,” என்ற சிவராஜன், “இஸ்லாம் குறித்த அவரது கருத்துகளை இவர்களும் ஏற்றுக்கொள்கிறார்களா? அல்லது, தேவை ஏற்படும் போதெல்லாம், மக்களைப் பிளவுபடுத்தி சுலபமாக ஆட்சி செய்ய, ஒரு முக்கியக் கருவியாக ஜாகீர் நாயக்கைப் பி.எச். அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதா?” என சிவராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாரிசான் நேஷனல் அரசாங்கம் தனது ஆட்சியை நிலைநிறுத்திக்கொள்ள, 60 ஆண்டுகள் கையாண்ட பிரித்தாளும் சூட்சமத்தை, ஒரு வருடத்தில் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கமும் கற்றுக்கொண்டதா?

“இன மற்றும் மத அடிப்படையில், நமது மக்கள் போராடிக்கொண்டே இருக்கும் வகையில், தனிநபர்களையும் சில உணர்ச்சிப்பூர்வமான சிக்கல்களையும் பயன்படுத்த இவர்களும் தெரிந்துகொண்டார்கள்.

“எனவே, அரசியல்வாதிகள் சரியான விஷயங்களைச் சொல்லி, நமக்கு வழி காட்டுவார்கள் என இன்னும் காத்திருந்தால், அது நடக்காது. இவர்களின் தீய அரசியல் சூழ்ச்சிகளை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும், அவர்களால் நாம் பாதிப்படைவதைத் தவிர்க்க வேண்டும்,” என சிவராஜன் மலேசியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

‘க்ஹாட்’ பிரச்சினை தொடங்கி, சிலாங்கூரில் பெற்றோர் ஒருதலைபட்சமாக மதம் மாற்றும் மசோதா, டோங் ஜோங் மற்றும் ஸாகிர் நாயக் வரையிலான பிரச்சினைகள் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இடையில் சூடான அறிக்கைகளை வெளியிடவும், அணிதிரட்டவும் மட்டுமே வழிவகுக்கின்றன என்றார் அவர்.

மேலும், பி.எச். கூட்டணியில், அறியப்படாத சில அரசியல் சக்திகள், தங்கள் சுயநலனுக்காக அவர்களின் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தி வருவதாகத் தெரிவதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“மக்களிடையே ஒருபோதும் முடிவடையாமல் இருக்கும் இந்த வெறுப்புணர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அனைத்து இனத்தினரும் மதத்தினரும் அணிதிரள வேண்டும். நமது அரசியல்வாதிகள் தோற்றுப்போன இந்த விஷயத்தில், மக்கள் மிகுந்த முதிர்ச்சியையும் புரிதலையும் காட்டி, முளையிலேயே இந்த இனப் பதட்டங்களைக் கிள்ளி வீச வேண்டும்.

“இன, மத உயரடுக்கு மக்களோடு ஒப்பிடும்போது, நமது மலாய், சீன, இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தினருக்குப் பொதுவான பல விஷயங்கள் இருக்கின்றன. சில தரப்பினரால் திட்டமிடப்பட்ட இந்த அழிவு கருவிகள், நமது இன நல்லிணக்கத்தையும் வர்க்க ஒற்றுமையையும் அழிக்க நாம் அனுமதிக்கக் கூடாது,” என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here