டெல்லி
இந்திய விளையாட்டு வீரர்களுக்கான தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையமான வாடாவின் தனிக்குழுவினர் சமீபத்தில் மேற்கொண்ட கள ஆய்வின் போது இந்தியாவின் ஊக்கமருந்து சோதனை ஆய்வகமான NDTL யின் சோதனை முறைகள் சர்வதேச தரத்திற்கு இணையாக இல்லை என்பது தெரியவந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வாடா தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் NDTL-ல் ஆய்வு செய்யப்படாமல் உள்ள மாதிரிகள், மற்றும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ள மாதிரிகளை அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்திற்கு மாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையமான நாடா, இந்தியாவுக்கு வெளியே வாடவால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள் மூலம் மட்டுமே விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமருந்து சோதனைகளை மேற்கொள்ள முடியும்.
ஆகஸ்ட் 20ம் தேதி முதல் இந்த அங்கீகார ரத்து நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் அடுத்த 21 நாட்களுக்குள் NDTL சசுவிட்சர்லாந்தின் லசானே நகரில் உள்ள சர்வதேச தீர்ப்பாயத்தில் முறையிடலாம். மேலும் இந்த 6 மாதத்தில் வாடாவின் ஆய்வக நிபுணர் குழு முன்னிலையில் NDTL ன் பரிசோதனை முறைகள் சர்வதேச தரத்துக்கு இணையானவை என நிரூபிக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில் மேலும் 6 மாதங்களுக்கு, அங்கீகாரம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஒரு வருடத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் இந்த அங்கீகார ரத்து இந்திய விளையாட்டு துறைக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.