
கோலாலம்பூர்,
பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்போடு, நேற்று நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கு தொடங்கியபோது, வழக்கறிஞர் கோபால் ஶ்ரீராம் வழக்கை நடத்த தகுதி பற்றி விவாதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் அரசின் சார்பில் வழக்கை நடத்த கூட்டரசு நீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால் ஶ்ரீராமை அரசு நியமித்திருந்தது.
அவரின் நியமனம் சட்டத்துக்குப் புறம்பானது என கூறி நஜிப் ரசாக் அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முறையீட்டு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
நேற்று வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கோலின் லாரன்ஸ் செக்குராவின் முன்னிலையில் வந்தபோது, எதிர்தரப்பு வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா, ஶ்ரீராமை நீதிமன்றம் தகுதி இழக்கச் செய்தால், வழக்கு மீண்டும் விசாரிக்கப்படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் என தெரிவித்தார்.
மேலும், வழக்கில் அரசுத் தரப்பில் நஜிப் ரசாக்கின் மீது குற்றம் சுமத்த போதுமான ஆதாரம் இல்லை என்பதால், தாங்களே வெற்றி பெறப் போவதாகக் குறிப்பிட்டார்.
எனினும், அதற்கு பதிலளித்த நீதிபதி கோலின், வழக்கு தொடர்ந்து நடத்தப்பட அனுமதி அளித்தார்.