கோலாலம்பூர் – நாட்டின் இப்போதைய வறட்சி நிலை நீடித்தால் பல இடங்களில் நீர் நெருக்கடி ஏற்படலாம் என கூறப்படுகிறது. மலாக்கா உட்பட பல மாநிலங்களின் இப்பிரச்சினை ஏற்படக்கூடும் என தெரிகிறது .ஜோகூர் மாநிலத்தில் உள்ள சுங்கை கிரிசேக் ஆற்றின் நீர்மட்டம் குறைந்து வருவதால் அண்டை மாநிலமான மலக்காவிற்கு போதுமான நீர் வினியோகம் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன .
மலாக்காவில் நீர் விநியோகம் மோசமான நிலையில் இருக்கிறதா மற்றும் நீர் வினியோகப் பற்றாக்குறை ஏற்படுமா என்பதை பயனீட்டாளர்கள் தெரிந்துகொள்வதற்கு ஆர்வமாக இருப்பதாக மலாக்கா பயனீட்டாளர் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் சங்கத்தின் தலைவருமான கே முரளி தெரிவித்தார் .
1992 ஆம் ஆண்டு ஏற்பட்டதை போன்று மலாக்கா மாநிலத்தில் முழுமையான நீர் பங்கீட்டு முறை ஏற்படுத்தப்படுமா என மலாக்கா மாநில அரசாங்கத்திடமிருந்து உறுதியான முடிவை மக்கள் தெரிந்துகொள்ள விரும்புவதாகவும் அவர் சொன்னார்.
மலாக்காவில் பல அணைக்கட்டுகளில் நீர் மட்டம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் 1990 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டதை போன்று மோசமான நீர் நெருக்கடி ஏற்படலாம் என பயனீட்டாளர்கள் அஞ்சுகின்றனர்.
1996 ஆம் ஆண்டு பிற்பகுதியில் ஏற்பட்ட வறட்சி மற்றும் டுரியான் துங்கால் அணைக்கட்டின் நீர்மட்ட அளவை கண்காணிக்க தவறியது போன்ற அம்சங்களினால் 1992 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மலாக்காவின் ஏற்பட்ட மோசமான நீர் நெருக்கடிக்கு காரணம் என கூறப்படுகிறது .
அப்போது மக்கள் தங்களது தினசரி தேவைகளுக்காக நீரை வாங்கி சேமித்து வைப்பதற்கு நீர் கலங்களை பெருமளவில் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது.
மலாக்காவில் 3 அணைக்கட்டுகளில் நீர்மட்டம் குறைந்து வருவது கவலையளிப்பதாக இருக்கிறது இதனால் நகரின் மையப் பகுதிகளில் நீர் அழுத்தம் குறைவாக இருக்கக் கூடிய சூழ்நிலை உருவாகலாம் என பயனீட்டாளர்கள் கருதுவதாக முரளி தெரிவித்தார்.
இந்நிலையில் புதிய நீர் வளங்களை மாநிலம் கண்டறிய வேண்டும் என தேசிய நீர் சேவை ஆணையத்தின் தலைவர் சார்ல்ஸ் சந்தியாகு கூறியுள்ளார் . மோசமான நீர் பாதிப்பை தவிர்ப்பதற்கு இத்தகைய மாற்றங்கள் உதவ முடியும் என அவர் தெரிவித்தார்.
வியாழக்கிழமையன்று பண்டார் ஹீலிர் நகர்புற பகுதிகளைச் சேர்ந்தவெளி குடியிருப்புவாசிகள் நீர் அழுத்த பிரச்சினையை எதிர் நோக்கினர். கடந்த சில நாட்களாக அலோர் காஜா வட்டாரத்திலும் நீர் அழுத்தம் மிகவும் குறைவாக இருப்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
எதிர்காலத்தில் நீர் நெருக்கடியை தவிர்ப்பதற்கு நிலத்தடி நீர் உட்பட புதிய நீர் வளங்களை மலாக்கா கண்டறிய வேண்டும் என சார்லஸ் சந்தியாகோ ஆலோசனை தெரிவித்தார்
நாடு முழுமையுமே நீர்வளங்களுக்கு நீண்டகால அடிப்படையில் முன்னுரிமை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
நீர் நெருக்கடி என்பது பெரிய விவகாரமாகும் .சரியான முறையில் இதனைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
மறுசுழற்சி கையிருப்பு மற்றும் நீருக்கான புதிய வளங்களை கண்டறிவதற்கு அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என சார்ல்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
நீர் மறுசுழற்சி சாதனங்களை கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு வரி விலக்கை வழங்கலாம் என்றும் அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.