ஆலயத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய வழியில் விபத்து

ஈப்போ –

வடக்கு – தெற்கு நெடுஞ்சாலை 246.1ஆவது கிலோ மீட்டரில் (தெற்கே) நிகழ்ந்த கோர சாலை விபத்தில் மூன்று இந்தியர்கள் பலியாயினர்.

நேற்று முன்தினம் இரவு 10.00 மணி அளவில் இந்த விபத்து நேர்ந்தது.
இவ்விபத்தில் கே. மகேந்திரன் (வயது 56), பி. அருணா (வயது 56), எஸ். தவமலர் (வயது 52) ஆகியோர் மரணமுற்றனர்.

விபத்துக்குள்ளான காரில் பயணம் செய்த பி. ருக்குமணி (வயது 53), பி.அமுதா (வயது 57) ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் ஈப்போ ராஜா பைனூன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இரும்புக் கம்பிகளை ஏற்றிச் சென்ற லோரியின் முன்புற வலது டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த லோரி வலதுபுறமாகச் சென்று சுமார் 100 மீட்டர் தூரத்தில் நின்றது. அந்தச் சமயத்தில் பின்புறமாக வந்து கொண்டிருந்த இவர்களின் ஹோண்டா கார் தவிர்க்க முடியாத நிலையில் லோரியின் பின்புறம் மோதி இடதுபுறமாகத் திரும்பி இருக்கிறது.

அந்தச் சமயத்தில் பின்புறமாக வந்த கார்கள் சரமாரியாக இவர்களின் ஹொண்டா காரை மோதித் தள்ளின. இவ்விபத்தில் ஆறு வாகனங்களும் இரண்டு மோட்டார் சைக் கிள்களும் சிக்கியதாகத் தெரிய வருகிறது. இவ்விபத்தில் மேலும் 10 பேர் காயமடைந்தனர்.

மரணமுற்றவர்களின் உடல்கள் பரிசோதனைக்காக ராஜா பைனூன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. விபத்தில் சிக்கிய இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கோலக்கங்சார் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்குச் சென்று தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பிய வழியில் இந்தத் துயரம் நிகழ்ந்தது என்று தவமலரின் கணவர் குணசேகரன் தெரிவித்தார்.

இவர்கள் சக்திபீடம் எனும் அமைப்பின் வாயிலாக ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் என்றும் அவர் சொன்னார். லோரி ஓட்டுநரான 45 வயது நபர் தடுத்து வைக்கப்பட்டார் என்று கோலக்கங்சார் போலீஸ் தலைவர் ஏசிபி ரஸாலி இப்ராஹிம் தெரிவித்தார்.

1987ஆம் ஆண்டு போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41 (1)இன் கீழ் இந்த விபத்து பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here