தெஹ்ரான் –
ஈரானில் ஐம்பத்திரண்டு இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அண்மையில் அறிவித்திருந்தார். கடந்த 1979ஆம் ஆண்டில் ஈரானில் அமெரிக்கத் தூதரகத்தில் ஐம்பத்திரண்டு அமெரிக்க குடிமக்கள் ஈரானியர்களால் ஓராண்டுக்கும் மேலாக பிணைபிடிக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக் காட்டும் வகையில் டிரம்ப் அவ்வாறு கூறியிருந்தார்.
அது பற்றி நேற்று கருத்துரைத்த ஈரானிய அதிபர் ஹசான் ரோவ்ஹானி, அமெரிக்காவுக்கு 290 எனும் எண்களும் தற்போது நினைவிருக்க வேண்டும் என்று எச்சரித்தார்.
கடந்த 1988ஆம் ஆண்டு ஜூலை மாதம் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த ஈரானிய விமானத்தை அமெரிக்க போர்க்கப்பலொன்று சுட்டு வீழ்த்தியது. அந்த விமானத்தில் இருந்த அறுபத்தாறு குழந்தைகள் உட்பட இருநூற்று தொண்ணூறு பேர் அதில் உயிரிழந்தனர்.
அதில் பலியானவர்களின் எண்ணிக்கையை சுட்டிக்காட்டி ரோவ்ஹானி தமது டுவிட்டர் செய்தியில் அமெரிக்காவை மறைமுகமாக எச்சரித்துள்ளார்.