விமானத்தை வீழ்த்தியது ஈரான் பாய்ச்சிய எறிபடை!

ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக மேலை நாடுகள் தகவல்

வாஷிங்டன் –

ஈரான் பாய்ச்சிய எறிபடையினால்தான் உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று மேலை நாட்டுத் தலைவர்கள் நேற்று அறிவித்தனர். அந்த விமானம் தவறாக சுடப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகே புதன்கிழமையன்று அந்த விமானம் நெருப்புக் கோளத்துடன் விழுந்து நொறுங்கியதில் அதிலிருந்த நூற்று எழுபத்தாறு பேரும் உயிரிழந்தனர்.

அந்த விமானம் ஈரானிய எறிபடையினால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து முழுப்புலன்விசாரணை நடத்துமாறு கனடா மற்றும் பிரிட்டனின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தங்களின் வான்தற்காப்புச் சாதனத்தால்தான் அந்த எறிபடை பாய்ச்சப்பட்டது எனும் குற்றச்சாட்டை ஈரான் நிராகரித்தது. ஈராக்கில் அமெரிக்க விமானப் படைத்தளங்கள் ஈரான் எறிபடைகள் பாய்ச்சிய ஒரு சில மணி நேரத்திற்குப் பிறகு அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. விமானப் படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதன் காரணமாக அமெரிக்கா பதில் தாக்குதல் நடத்தலாம் என பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டது.

அந்நேரத்தில் தெஹ்ரானின் இமாம் கோமேனி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு வந்த உக்ரேன் விமானத்தைத் தவறாக அமெரிக்க விமானம் என்று கருதி அதன் மீது எறிபடை ஏவப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்கத் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விமானத்தை நோக்கி மொத்தம் மூன்று எறிபடைகள் பாய்ச்சப்பட்டதைக் காட்டும் இரண்டு ஊடுகதிர் சமிக்ஞைகளை துணைக்கோளம் கண்டுபிடித்தது. மூன்றாவது சமிக்ஞை அடையாளம் காணப்பட்டபோது அந்த விமானம் வெடித்துச் சிதறியது என்று அந்த ஊடகங்கள் குறிப்பிட்டன.

இதனிடையே, உக்ரேன் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது ரஷ்யாவில் தயாரிக்கப்படும்
‘தோர்’ வகை எறிபடையாகும் என்று அமெரிக்கத் தற்காப்புத்துறை அதிகாரிகளும் அந்நாட்டின் உயர்நிலை உளவுத்துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர் என்று சி.பி.எஸ். நியூஸ் தொலைக்காட்சி குறிப்பிட்டது.

அந்த விமானத்திற்கு என்ன நேர்ந்தது என்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். தரையிலிருந்து விண்ணுக்குப் பாயும் ஈரானிய எறிபடையினால் அந்த விமானம் தகர்க்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் உளவுத்துறைத் தகவல்களைத் தாம் பெற்றுள்ளதாக கனடிய பிரதமர் ஜஸ்டின் துரூடோ குறிப்பிட்டுள்ளார். அது குறித்து இப்போதே எந்தவொரு தீர்க்கமான முடிவுக்கும் வந்துவிட முடியாது என்று தெரிவித்த அவர், மேல் விவரங்களை வெளியிட மறுத்துவிட்டார்.

உக்ரேன் விமானப் பேரிடரில் உயிரிழந்த நூற்று எழுபத்தாறு பேரில் அறுபத்து மூன்று பேர் கனடிய குடிமக்கள் ஆவார். எண்பத்திரண்டு ஈரானிய பயணிகளும் அதில் இருந்தனர்.

கனடிய பிரதமர் ஜஸ்டினின் அதே கருத்தை பிரட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜாக்சனும் நேற்று எதிரொலித்தார். இந்த விவகாரத்தில் கனடாவுடனும் இதர அனைத்துலக பங்காளி நாடுகளுடனும் பிரிட்டன் ஒத்துழைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, கனடாவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டோமினிக் ராப், ஈரானுக்கு பிரிட்டிஷ் குடிமக்கள் பயணம் செய்ய வேண்டாமென்று அறிவுறுத்தினார்.

உக்ரேன் விமானம் ஈரான் பாய்ச்சிய எறிபடையினால் வீழ்த்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் இத்தருணத்திலும் பதற்றம் மேலோங்கியிருக்கும் இந்நிலையிலும் ஈரானுக்கு செல்வது ஆபத்தாகும் என்று டோமினிக் ராப் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here