ஸ்டாலின் முதல்வராக வரக்கூடாது: காங்கிரஸ் எம்.பி.

விருதுநகர் –

மு.க.ஸ்டாலின் முதல்வராக வரக்கூடாது என திமுகவிற்குள்ளேயே ஒரு கூட்டம் இருப்பதாக மாணிக்கம் தாக்கூர் குற்றஞ்சாட்டினார்.  திமுக, காங்கிரஸ் கூட்டணி இடையே நாளுக்கு நாள் வார்த்தைப் போர் முற்றி வருகிறது.

பொங்கல் தினத்தன்று பங்கேற்ற நிகழச்சியில் திமுக பொருளாளர் துரைமுருகன் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். காங்கிரஸ் திமுக கூட்டணியை விட்டு விலகினால், தங்களுக்கு கவலை இல்லையென்றும், வாக்கு வங்கியே இல்லாத கட்சி காங்கிரஸ் என்றும் துரைமுருகன் பேசினார்.

அவர் இவ்வாறு பேசியதையடுத்து தமிழக காங்கிரஸ் தரப்பில் கடுமையான எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. தமிழக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், உங்களுக்கு இந்த ஞானம் ஏன் வேலூர் இடைத்தேர்தலுக்கு முன்பே வரவில்லை என்று கேள்வியெழுப்பினார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மோகன் குமாரமங்லம், வரலாற்றை மறந்து துரைமுருகன் பேசக் கூடாது என்றும் 2006இல் காங்கிரஸ் ஆதரவு அளித்ததால் தான் துரைமுருகன் அமைச்சரானார் என்பதை மறந்து விடக்கூடாது என்று ஆதங்கத்தை தெரிவித்தார்.

இந்நிலையில் விருதுநகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அக்கட்சியின் எம்.பி மாணிக்கம் தாகூர், தோழமை சரியில்லை என்றால் மாற்றிக் கொள்ளலாம் என்று பகிரங்கமாக தெரிவித்தார்.

காங்கிரஸ் கூட்டணி இல்லாதபோது கூட, கனிமொழியை மாநிலங்களவை உறுப்பினராக்கியது, அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியகாந்தி என்பதை திமுக மறந்துவிடக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் முதல்வராக வரக்கூடாது என திமுகவிற்குள்ளேயே ஒரு கூட்டம் இருப்பதாக மாணிக்கம் தாக்கூர் குற்றஞ்சாட்டினார். திமுக, காங்கிரஸ் கூட்டணி வரலாற்றை சரியாக படிக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியை தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் தேர்தலில் தனியாக நிற்பதற்கு தயக்கம் காட்டுவதாகவும் மாணிக்கம் தாக்கூர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here