காஞ்சிபுரம் –
உத்திரமேரூர் அருகே 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 2 ‘சதி கற்கள்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உத்திரமேரூர் வட்டம், சாலவாக்கம் கிராமத்தில் இருந்து திருமுக்கூடல் செல்லும் சாலையில் உள்ளது எடமிச்சி கிராமம். உத்திரமேரூர் வர லாற்று ஆய்வு மையத் தலைவர் சு. பாலாஜி தலைமையில் ‘தமிழர் தொன்மம் குழு’வின் அமைப்பாளர் வெற்றித்தமிழன் ஆகியோர் இணைந்து கள ஆய்வு செய்தபோது, எடமிச்சி கிராமத்தில் இருந்து 2 சதி கற்களை கண்டுபிடித்துள்ளனர்.
இவை 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதி கற்களாக இருக்குமென கருதப்படுகின்றன.
தன் இனக்குழுவை காப்பதற்காக அல்லது தனது ஊரை காப்பதற்காக போரில் வீர மரணம் அடைந்த வீரனோடு, அவனது மனைவி தீ மூட்டி தானும் உயிரை மாய்த்துக் கொள்வது முன்பு வழக்கத்தில் இருந்துள்ளது. இத்தகைய உடன் கட்டை ஏறும் நிகழ்வுக்கு அக்காலத்தில் ‘சதி’ என்று பெயர். வீர மரணத்தை தழுவிய அத்தம்பதியின் நினைவை போற்றும் வகையில், அவர்களது உருவங்களை கல்லில் சிற்பமாக செதுக்கி வைத்து, அவற்றை வணங்கி வழிபடுவது அன்றைய நடைமுறை.
இந்தக் கற்களுக்கு ‘சதி கற்கள்’ என்று பெயர்.
இது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் சு. பாலாஜி கூறுகையில், இந்த சதி கற்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டு, சிற்ப அமைப்பு ஆகியவற்றை கொண்டு இவை 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கருதமுடிகிறது. இந்த 2 சதி கற்களையும் தொல்லியல் துறை உரிய கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும் என்றார்.