இரண்டு ஆலயங்கள் உடைப்பு!

கிள்ளான் –

கிள்ளான் பண்டார் போட்டானிக் பகுதியில் இருந்த இரண்டு இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டன. ஸ்ரீ மாரிமுத்து நாகம்மாள் ஆலயம், ஸ்ரீ ஆதிபராசக்தி ஆலயம் இரண்டையும் நேற்றுக் காலை அங்கு வந்த கிள்ளான் மாவட்ட நில அலுவலக அமலாக்கப் பிரிவினரும் கிள்ளான் நகராண்மைக் கழக அமலாக்க பிரிவினரும் மண்வாரி இயந்திரத்தின் உதவியுடன் தரைமட்டமாக்கினர். அப்போது அங்கு குழுமியிருந்த பக்தர்கள் கண்கலங்கி நின்றனர்.

நேற்றுக் காலை 8.00 மணிக்கு ஆறு லோரிகளில் வந்திறங்கிய மத்திய சேமப்படையினர் (எஃப். ஆர். யு) பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆலயத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு வளையத்தைக் கட்டி பாதுகாப்பை வலுப்படுத்தினர்.

முன்னதாக ஆலயப் பொறுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகள் நிலவரங்களை விளக்கிக் கூறினர். நில இலாகா அதிகாரிகளின் விளக்கத்தைக் கேட்டுக்கொண்ட அவர்கள் ஆலயத்தில் உள்ள சிலைகளை அப்புறப்படுத்த கால அவகாசம் வழங்கும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர்களும் அதற்கு வாய்ப்பளித்தனர்.

ஸ்ரீ மாரிமுத்து நாகம்மாள் ஆலயத்திலுள்ள நாகப்புற்றை அப்புறப்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கையை ஆலயத் தலைவர் எம்.ஜி.சுப்பிரமணியம், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜின் பிரதிநிதியான மகேந்திரன், ஸ்ரீ அண்டலாஸ் வட்டார இந்து சங்கத் தலைவர் சரஸ்வதி ஆகியோர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அதை சேதப்படுத்தாமல் ஆலயத்தை மட்டும் உடைக்க பணியாளர்களை கேட்டுக்கொண்டனர்.

கடந்த வாரம் ஆலயத்தின் அருகில் உள்ள மாட்டுப் பண்ணையை உடைக்கும்போதே அவ்வாலயத்தை உடைக்கும் நிலை ஏற்பட்டதால் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரியுடன் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து ஒரு வாரக் காலக்கெடு கொடுக்கப்பட்டது. அந்த காலக்கெடு முடிந்து ஒன்பதாவது நாளான நேற்று காலை வந்த அமலாக்க அதிகாரிகள் கோயில்களை உடைத்தனர்.

கோயில்கள் மற்றும் மாட்டுப்பண்ணை அமைந்திருந்த அந்த இடத்தில் சீன இஸ்லாமிய அன்பர்களுக்கு பள்ளிவாசல் கட்டுவதற்கும் அப்பகுதியிலுள்ள கால்வாயை அகலப்படுத்தி வெள்ளப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நீர் பாசனத்துறை இலாகாவின் பயன்பாட்டிற்கும் வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here