ஏப்ரல் 10இல் முடிவு
கோலாலம்பூர் –
மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தை ஏப்ரல் 14ஆம் தேதிக்கு அப்பால் நீட்டிக்க வேண்டுமா என்று சுகாதார அமைச்சு ஏப்ரல் 10 ஆம் தேதி தனது முடிவை அறிவிக்கும் என்று அதன் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
தினசரி பதிவுசெய்யப்படும் புதிய கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறதா அல்லது உயர்கிறதா என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படும் என்று அவர் சொன்னார். கட்டுப்பாட்டை நீட்டிக்க வேண்டுமா இல்லையா என்பதை சுகாதார அமைச்சின் ஆய்வுத் தரவு நமக்கு தெரிவிக்க வேண்டும். நாம் அதை அறிவியல் மற்றும் உண்மைகளின் அடிப்படையில் பார்க்க வேண்டும்.
முதல் தடையுத்தரவு ஆணை மார்ச் 18ஆம் தேதி முதல் 31ஆம் தேதிவரை அமல்படுத்தப்பட்டது. இப்போது இரண்டாம் கட்ட தடையுத்தரவு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 14ஆம் தேதிவரை நீடிக்கிறது.
இந்நிலையில் இந்த உத்தரவை நீட்டிக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து முடிவெடுப்பதற்கு ஆய்வுத் தரவு எங்களுக்குக் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று நேற்று புத்ராஜெயாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
வரும் 10ஆம் தேதிக்குள் இந்த ஆய்வுத் தரவு எங்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது தினசரி 106 முதல் 235 கோவிட் -19 கிருமி தொற்றுநோய் கிருமிகள் பதிவு செய்யப்படுவதாக அவர் சொன்னார்.
இந்த கொடிய நோய் பரவாமல் தடுக்க சுகாதார அமைச்சு உட்பட அனைத்து மலேசியர்களின் கைகளில் உள்ளது என்று டத்தோஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.