தெமர்லோ, ஏப்.16-
கையிருப்புப் பணமின்றி உண்ண உணவின்றி தவித்து வந்த ரஷ்ய ஆடவர் ஒருவர் தெமர்லோ காவல் துறை அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டார்.
ரஷ்யாவைச் சேர்ந்த பொறியியலாளர் தாய்லாந்திலிருந்து தரை மார்க்கமாகப் பயணித்து குவாந்தான் நகரை அடைந்திருக்கிறார்.
கொரோனா தொற்று காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டதால் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு ரஷ்யாவுக்குத் திரும்ப இவர் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளார்.
குவாந்தானிலிருந்து கோலாலம்பூர் நோக்கி வந்த லோரி ஒன்றில் ஏறிக் கொண்ட இவர் தெமர்லோவில் இறங்கியுள்ளார்.
சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியவில்லை. கையில் பணமில்லை.
எனக்கு உணவு கொடுத்து உதவுங்கள் என அட்டைப்பெட்டியில் எழுதி கழுத்தில் இவர் மாட்டிக் கொண்டார்.
தெமர்லோ நகரில் உள்ள துரித உணவகத்தின் முன் அவர் அமர்ந்திருக்கும் காட்சி முகநூலில் பதிவானதைத் தொடர்ந்து அங்கு சென்ற அதிகாரிகள் அவரை மீட்டு தஞ்சோங் லாலாங் கொரோனா சோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர் என தெமர்லோ மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏ.சி முகமட் யுஸ்ரி ஒஸ்மான் தெரிவித்தார்.