நெருக்கடி காலத்தை வரும்படியாக்கும் சமூகமா?

தொண்டூழிய நெஞ்சங்கள் வேதனை

ஜார்ஜ்டவுன் –

கோவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையில் வாழ்ந்து வரும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் நம் சமூகத்தைச் சேர்ந்த பலர் இந்தச் சூழலை வரும்படியாக்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்று பினாங்கு, செபெராங் பிறை வட்டாரத்தில் உள்ள தொண்டூழிய சமூக அமைப்பினர் தங்களின் வேதனையை வெளிக்கொணர்ந்தனர்.

செபெராங் பிறை வட்டாரத்தில் ஒரு வீட்டில் இருந்து எங்களுக்கு உதவி வேண்டும், உண்ண உணவில்லை, சிரமத்தில் இருக்கின்றோம், வேலையும் கிடையாது என்று அலைபேசி வழியாக கூறியதை எண்ணி கருணை உள்ளத்தோடு பலருக்கும் உதவும் நாம் அவர்களுக்கும் உதவலாம் என்று அவரின் வீடு தேடிச் சென்று உதவிக்கரம் நீட்டினோம்.

எங்களுக்கு உடல்நலம் சரியில்லை நீங்கள் எங்கள் பகுதிக்கு வந்து பொருளைக் கொடுங்கள் என்று குறிப்பிட்ட அந்தக் குடும்பம் கேட்க, நாங்கள் வீட்டிற்கே சென்று உதவிய வேளையில் அவர்களின் வீட்டில் 15 மூட்டைகள் அரிசியும் இன்னும் பல்வேறான மளிகைப் பொருட்களும் இருந்ததைப் பார்த்து உண்மையில் மனம் வேதனை அடைந்தோம்.

இதேபோன்று பலர் கொடுப்பதை எல்லாம் வாங்கி வீட்டில் பதுக்கிக்கொண்டு, மீண்டும் மீண்டும் உதவி கேட்டு வருகிறார்கள் என்று பட்டர்வொர்த்தில் பிரபலமான தொண்டூழிய இயக்கத்தின் பொறுப்பாளர் கூறினார்.

இதே போன்று நாங்கள் பல ஆண்டுகள் ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறோம். கல்விக்கும் உணவுக்கும் வீட்டு வாடகைக்கும் மேலும் ஆடை அணிகலன்களுக்கும் தொடர்ந்து பல ஆண்டுகள் உதவி வரும் நாங்கள், இந்தக் கோவிட்-19 காலகட்டத்தில் உதவுவதற்கு வீடு வீடாகச் சென்று பார்த்தால், சிலர் ஆடம்பர வீட்டில் இருப்பதையும் விலை உயர்ந்த கார்களைப் பயன்படுத்துவதையும் பார்த்து உண்மையில் அதிர்ச்சிக்குள்ளானோம் என்று அந்தத் தொண்டூழிய அமைப்பின் மேலும் ஒரு தலைவர் மனம் வெதும்பினார்.

இதேபோன்று மத்திய செபெராங் பிறையில் பல குடும்பங்கள், பிரமுகர்கள், அரசு சார்பற்ற இயக்கப் பொறுப்பாளர்களின் கைப்பேசி எண்களை வைத்துக்கொண்டு, அவர்களை அழைத்து உதவி தாருங்கள் என்று கேட்டு, மளிகைப் பொருட்களையும் உணவுகளையும் பெற்று வீட்டில் குவித்து வைத்தது போதாதென்று மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட தொண்டு நெஞ்சம் கொண்டவர்களைக் கைப்பேசியில் அழைத்து, வீட்டில் எரிவாயு (கியாஸ்) முடிந்து விட்டது, அடுப்புக்கூட பழுதாகிவிட்டது எங்களுக்கு உதவுங்கள் என்று கேட்க, கொடை நெஞ்சங்களும் மனம் இரங்கி அடுப்பும் எரிவாயும் அனுப்பி வைக்கிறோம், வீட்டு முகவரியைக் கொடுங்கள் என்று கேட்டால், எங்கள் வீடு நன்றாக இருக்காது, அதனால் நீங்கள் வீட்டிற்கு வரவேண்டாம், பணத்தை மட்டும் கொடுங்கள் நாங்கள் சொந்தமாக வாங்கிக் கொள்கிறோம், உங்களுக்கு சிரமம் வேண்டாம் என்று சொல்கிறார்கள்.

பின் அவர்களின் பின்புலத்தை ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் வசதியாக இருப்பது தெரிய வருகிறது. இதுபோன்று தொலைபேசியில் வசூல் செய்து, இந்த கோவிட்-19 காலகட்டத்தை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று ஒரு பிரமுகர் வேதனையோடு விவரித்தார்.

இதேபோன்று பல்வேறு இடங்களில் நடப்பதாகவும் உண்மையில் வறுமையில் வாடுபவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உதவிகளை எல்லாம், நம் சமூக மக்கள் சிலர் இப்படி தட்டிப் பறிக்கிறார்கள் என்றும் அரசு சார்பற்ற இயக்கத் தலைவர் பலர் மக்கள் ஓசையிடம் கூறினர்.

பினாங்கு மாநிலத்தைப் பொறுத்தவரையில் மாநில அரசாங்கம், சமூகநல இலாகா, சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், டத்தோக்கள், பிரமுகர்கள், பினாங்கு இந்து அறப்பணி வாரியம், பினாங்கு இந்து சங்கம், பினாங்கு இந்து தர்ம மாமன்றம், ஆலயங்கள் மேலும் பல அரசு சார்பற்ற இயக்கங்கள், தனிமனிதர்கள் என்று இந்த கோவிட்-19 காலத்தில் வாரி வாரி வழங்கி வரும் வேளையில், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, உணவுப் பொருட்களை இலவசமாகப் பெற்று வீட்டில் அடுக்கி வைக்கும் நம் சமூகத்தை எண்ணி என்னதான் சொல்வது என்று புரியவில்லை என்று இந்து சார்ந்த அமைப்பின் தலைவர் ஒருவர் மிகுந்த வேதனையோடு தெரிவித்தார்.

பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ப. இராமசாமி தலைமையில் இயங்கும் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இந்த கோவிட்-19 காலத்தில் பல லட்சம் வெள்ளியை உதவியாக வழங்கியுள்ளது, ஆனால் இவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்று பலர் புலனங்களில் பொய்த் தகவல்களைப் பரப்பி வருகிறார்கள் என்று சமூக அமைப்பின் பொறுப்பாளர் ஒருவர் விவரித்தார்.

இந்த மளிகை மற்றும் உணவுப் பொருட்கள் உண்மையிலேயே வறுமையில் வாடுபவர்களுக்கு வழங்கப்பட்டால் அவர்களின் பசியைப் போக்கலாம். இவர்கள் போன்றோருக்குக் கிடைக்க வேண்டியதைத் தட்டிப் பறிப்பது பெரும் பாவம் என்று மற்றொரு கொடைநெஞ்சர் மனம் நொந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here