அனைவரும் கொரோனா வைரசுடன் வாழ கற்றுக்கொண்டு விடுங்கள்

புதுடெல்லி,மே 09- 

மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால், டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தாக்குதல் இரட்டிப்பாகும் காலம், குறைந்து இருக்கிறது. 2 நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாக 12 நாட்கள் ஆனது. இப்போது 10 நாட்களில் இரட்டிப்பாகி விடுகிறது. இதற்கு காரணம், கொரோனா வைரஸ் தொற்று குறிப்பிட்ட சில இடங்களில் அதிகமாக ஏற்படுவதுதான்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை தளர்த்துவது பற்றி பேசுகிறோம். இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவது பற்றி பேசுகிறோம்.

ஆனால் நம் முன்னே ஒரு மிகப்பெரிய சவால் இருக்கிறது. அது, நாம் கொரோனா வைரசுடன் வாழ கற்று விட வேண்டும் என்பதுதான்.

கொரோனா வைரசுடன் வாழ கற்று விட வேண்டும் என்று சொல்கிறபோது, வைரசில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்கு வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றுவது மிகவும் முக்கியம். சமூகத்தில் நமது நடத்தையில் மாறுதல் வேண்டும். இது மிகப்பெரிய சவால்தான் இதற்கு அரசுக்கு மக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கி, சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 540 ஆக உள்ளது. இது 29.36 சதவீதம் ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று காலை 8 மணியுடன் முடிந்த) 1,273 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை நமது நாட்டில் 216 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. 42 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக ஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை.

சென்ற 21 நாட்களில் 29 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோன வைரஸ் தாக்குதல் இல்லை. 14 நாட்களாக 36 மாவட்டங்களில் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று புதிதாக ஏற்படவில்லை. கடந்த 1 வாரத்தில் 46 மாவட்டங்களில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

ஜூன் அல்லது ஜூலையில்தான் கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் உச்சத்துக்கு செல்லும் என்று டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியிருப்பது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு லாவ் அகர்வால் பதில் அளிக்கையில், “வெவ்வேறு நிறுவனங்கள், பல கோடி மக்களில் சில ஆயிரக்கணக்கானோரை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கணிப்புகளை கூறுகின்றன. ஆனால் அதன் அடிப்படையில் கள அளவிலான செயலை கணிப்பது என்பது சற்று கடினமானதுதான். எதையெல்லாம் செய்ய வேண்டும், எதையெல்லாம் செய்யக்கூடாது என்று கூறப்பட்டவற்றை நாம் சரியாக பின்பற்றி வந்தால், கொரோனா வைரஸ் தாக்குதலில் உச்சத்தை எட்டாமல் இருக்க முடியும். நமது பாதிப்பு வளைவு உயராமல் தட்டையாக இருக்கும்” என பதில் அளித்தார்.

மேலும், 21 ஆஸ்பத்திரிகளில் நோயில் இருந்து விடுவிக்கிற பிளாஸ்மா சிகிச்சையின் பாதுகாப்பு, செயல்திறன் பற்றி மதிப்பிடுவதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு நடத்தும். இந்த ஆய்வுக்கு மராட்டியத்தில் 5, குஜராத்தில் 4, ராஜஸ்தான், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகியவற்றில் தலா 2, கர்நாடகம், பஞ்சாப், தெலுங்கானா மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகாரில் தலா ஒரு ஆஸ்பத்திரிகள் தேர்வு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here