கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவரான Loujain Alhathloul (30), 2018ஆம் ஆண்டு மே மாதம் ஒன்பது சமூக ஆர்வலர்களுடன் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டார்.
சமூக ஆர்வலரான இளம்பெண் ஒருவர் இரண்டாண்டுகள் சவூதி சிறையில் செலவிட்டுவிட்ட நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அவரது விசாரணை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதற்கு முன், 2014ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் பெண்களுக்கு வாகனம் விதிக்கப்பட்டுள்ள தடையை மீறியதோடு அதை நேரலையில் ஒளிபரப்பியதற்காக அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அப்போது தான் தனியறையில் அடைத்து வைக்கப்பட்டு மின்சார ஷாக் கொடுக்கப்பட்டும், கசையாலடிக்கப்பட்டும், பாலியல் ரீதியாக தாக்கப்பட்டும் சித்திரவதை செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
14 மாதங்கள் சிறைத்தண்டனைக்குப்பின் தான் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்பட்டதை மறுத்து ஒரு வீடியோ அறிக்கை வெளியிட்டால், அவரை விடுதலை செய்வதாக ஆசை காட்டினர் அதிகாரிகள்.
ஆனால் அதை மறுத்துவிட்டார் Loujain. அதன்பின், 2018இல் வெளிநாட்டு நிதியுதவியுடன் நாட்டை நிலைகுலையச் செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார் அவர். பின்னர் அந்த குற்றச்சாட்டுகள் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் தொடர்புகொண்டதாகவும், ஐக்கிய நாடுகள் சபையில் வேலை ஒன்றிற்கு விண்ணப்பிக்க முயன்றதாகவும் மாற்றப்பட்டன.
அதற்குப்பின் பல முறை காரணங்களே கூறாமல் அவரது வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால் தனது வழக்கு விசாரணை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுவிட்டதாக தான் அஞ்சுவதாக தெரிவித்துள்ளார் Loujain. கடந்த சனிக்கிழமை நிலவரப்படி சவூதி அரேபியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 50,000ஐ தாண்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.