முடியும்! ஆனால் முடியாது

ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டு என்பார்கள். இது உண்மைதான் என்பது பொதுவான பேச்சாக இருந்தது. இப்போது அதை நேரில் உணரும்படி நேர்ந்திருக்கிறது என்பதால் மக்கள் வாய்மூடிக்கிடக்கின்றனர்.

இன்றைய கொரோனா பிரச்சினை என்பது சுகாதாரப் பிரச்சினை மட்டுமல்ல. அது எங்கோ உற்பத்தியாகியிருக்கிறது என்பதும் உண்மைதான் இதையும் மறுப்பதற்கில்லை. சீனாவிலிருந்து வந்தாலும்  அமெரிக்காவிலிருந்து வந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. அதை ஏன் தடுக்கவில்லை என்பது ஒரு கேள்வியாக இருந்தாலும். இதில் பிரச்சினை ஒன்று தொக்கியிருப்பதை யாரும் உணரவில்லை என்பதில்தாம் வருத்தம் வானுயர்ந்து நிற்கிறது.

என்ன வருத்தம் அது? கொரோனா என்பது தொற்று. அதில் அதிகப்பற்று எதற்கு? கொரோனா வளர்வதற்கு கொரோனா காரணமல்ல என்றால் நம்பமுடிகிறதா? கொரோனா ஓர் இறக்குமதிச் சரக்கு. அதைக்கொண்டுவந்தவர்கள் அந்நியர்கள். அவர்கள்மீது முதன்மையாக அக்கறையில்லாமல் போனது ஒரு காரணம். அதை வருமுன் உணர்ந்திருந்தால் தடுத்திருக்கலாம். அதில் கவனக்குறைவு அரங்கேறிவிட்டது.

கொரோனா பற்றாளர்களைக் கொஞ்சம் தாராளமாகவே நடமாட அனுமதித்ததும் தவறு. பொதுவாகவே அதிகமாக தவறிழைத்தவர்கள் மக்கள் என்பதுதான் உண்மை. மக்கள் விலகியிருக்க வில்லை. தொற்று என்பதால் விலகியிருப்பது மட்டுமே சிறந்த அணுகுமுறை வைத்தியம்.

மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி என்பது காலம் கடந்த ஞானம். பரவிவிட்டபின்னர் எடுத்த அவசர முடிவு. காலம் கடந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு மக்களே பொறுப்பேற்க வேண்டும் என்பது குற்றச்சாட்டல்ல. காது கேளாமை என்றால் அது மிகையல்ல.

எட்டி நில்லுங்கள் என்றால் அந்நியர்கள் கேட்காமல் இருக்கலாம் . மலேசியர்களின் காதிலுமா விழவில்லை. அத்தனை பிரச்சினைகளையும் நெருங்காமல் தவிர்த்திருக்கலாம். அதில் மக்களின் சிந்தனை மதியாமை உணர்வைத்தான் தருகிறது. அரசாங்கத்தின் முயற்சி மலையாக இருந்தாலும் மக்கள் மதிக்கவில்லையென்றால் முயற்சிகளால் வீணாகிவிடும். மொத்தத்தில் பண விரயம்.

கொரோனாவை மருத்துவத்தால் கட்டுப்படுத்துவது ஒரு தொடர்கதை. மக்களால் அதை விரைவாகச் செய்ய முடியும். முடியும், ஆனால் முடியாது. மக்கள் இன்னும் தயாராக வில்லை. அதுபற்றிய அக்கறையில்லை.

திருமணம் செய்ய வேண்டாம் என்று சொல்லியும் மக்கள் கேட்கவில்லை. இது ஆலயத்தின் தவறும் இருக்கிறது. அனுமதி வழங்கியது புறம்பான செயல் என்பதை ஏன் உணரவில்லை?

காட்டிக்கொடுக்க எட்டப்பர்கள் தேவையில்லை. கைகளிலேயே கடுமையான ஆயுதங்களை வைத்துகொண்டுதான் ஒவ்வொருவரும் திரிகிறார்கள். அது என்ன? திவ்வியநாயகியின் உயிருக்கு உலைவைத்த அதே செயல்தான் . அதன் பிடி இறுக்கமானது. மக்கள் சிந்திக்காமல் இருந்தால் உயிர்களின் எண்ணிக்கை மரணத்தின் வாசலில் ஒரு மீட்டர் தள்ளி நிற்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here