கெஅடிலான் கட்சி தொற்றுவிக்கப்பட்டது முதல் இதுநாள் வரை கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் சங்கீதா ஜெயகுமார் சிலாங்கூர் மாநில கெஅடிலான் மகளிர் பிரிவுத் தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிலாங்கூர் மாநில கெஅடிலான் மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த செமெந்தா சட்டமன்ற உறுப்பினர் டரோயா அல்வி கடந்த வாரம் கட்சியில் இருந்து விலகினார்.
டத்தோஸ்ரீ அஸ்மின் அலியின் தீவிர ஆதரவாளரான இவர் விலகியதால் தற்போது சிலாங்கூர் மாநில கெஅடிலான் மகளிர் பிரிவு தலைவி பதவி காலியாகியுள்ளது.
இந்நிலையில் ஜூன் 19ஆம் தேதி சிலாங்கூர் கெஅடிலான் மகளிர் பிரிவு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 22 தொகுதி மகளிர் பிரிவினரில் 19 பேர் தொடர்ந்து கட்சிக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தனர்.
கெஅடிலான் மகளிர் பிரிவின் தேசிய துணைத்தலைவியாகவும் டாக்டர் டரோயா அல்வி பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 19ஆம் தேதி நடந்த கூட்டத்தில் சிலாங்கூர் மாநில கெஅடிலான் மகளிர் பிரிவின் இடைக்கால தலைவியாக சங்கீதா ஜெயகுமார் தேர்வு செய்யப்பட்டார்.
தேசிய அளவில் மகளிர் பிரிவின் உதவித் தலைவியாகவும் சிலாங்கூரில் துணைத்தலைவராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமாரின் புதல்வியான சங்கீதா ஜெயகுமார் தலைமையில் சிலாங்கூர் கெஅடிலான் மகளிர் பிரிவு மீண்டும் வெற்றிப் பாதையில் பீடுநடைபோட இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
சிலாங்கூர் கெஅடிலான் மகளிர் பிரிவின் உதவித் தலைவியாக இருந்த இர்மி மரியானி இனிமேல் துணைத்தலைவியாக பதவி வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூர் மாநில கெஅடிலான் மகளிர் பிரிவு ஆட்சிக்குழுவில் பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் ரோட்ஸியா இஸ்மாயில், புக்கிட் மெலாவாத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜூவரியா ஸுல்கிப்லி, பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் மரியா சின் அப்துல்லா, எலிங்பெத் வோங் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
கெஅடிலான் கட்சி தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிமுடன் இணைந்து டாக்டர் சேவியர் ஜெயகுமாரும் போராடியக் காலத்திலேயே சிறுவயதில் சங்கீதாவும் தன்னை இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.