இந்த ஆண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நிகழ்வதை முன்னிட்டு கோவில்களின் நடை அடைக்கப்பட்டு பூஜைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சூரியகிரகணம் முடிந்த பின்னர் கோவில் சுத்தப்படுத்தப்பட்டு பரிகார பூஜைகள் செய்த பின்னர் வழக்கமான பூஜைகள் நடத்தப்படும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் நேற்றிரவு 8.30 மணி முதல் மூடப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் கிரகணம் முடிந்த பின்னரே திறக்கப்படும் என்றாலும் இன்று முழுவதும் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. கொரோனா லாக் டவுன் காரணமாக இரண்டரை மாதங்களுக்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.
தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் கடந்த 11ஆம் தேதி முதல் பலத்த கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் இலவச தரிசனத்துக்கு திருப்பதியிலேயே 3 இடங்களில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று நெருப்பு வளைய சூரிய கிரகணம் கங்கண சூரிய கிரகணத்தை ஒட்டி நேற்று இரவு எட்டரை மணியில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்பட்டது.