நாட்டின் கல்வித் துறையின் முக்கிய தேர்வாக கருதப்படும் எஸ்பிஎம், எஸ்டிபிஎம், தேர்வு வகுப்புகள் கடந்த 24.6.2020ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியிருக்கிறது.
இந்நிலையில் தாய் மொழி வகுப்புகளின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. திறக்கப்பட்டுள்ள வகுப்புகளில் தமிழ் மொழி வழக்கம்போல் போதிக்கப்படுமா என்ற எண்ணம் பெற்றோர் மனங்களில் எழுந்துள்ளது.
கோவிட்-19 தொற்றின் மீட்பு நிலை கட்டுப்பாட்டுக் காலத்தில் பள்ளிகளைக் கட்டம் கட்டமாகும் திறக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக முக்கிய தேர்வு வகுப்புகளை கல்வி அமைச்சு தற்போது திறந்துள்ளது. நாட்டிலுள்ள பல இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்மொழி வகுப்புகள் முழு நேர ஆசிரியர்களால் நடத்தப்படுகிறது.
பெரும்பாலன பள்ளிகளில் பிஓஎல் எனப்படும் தாய்மொழி வகுப்புகளின் திட்டங்களின் வழியே நடத்தப்படுகின்றன. அவ்வாறு நடத்தப்படும் வகுப்புகள் 15 பெற்றோர் கேட்டுக்கொள்வதற்கு இணங்கவே நடத்தப்படுகின்றன. அவற்றில் பல 15 மாணவர்களின் எண்ணிக்கையை நேர் செய்வதற்கு நான்காம், ஐந்தாம் படிவ மாணவர்களை இணைத்தே நடத்தப்படுகின்றன.
இந்நிலையில் தற்போது மூன்றாம், நான்காம் படிவ மாணவர்களுக்கு அல்லாமல் ஐந்தாம் படிவ மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர் எண்ணிக்கையை காரணம் காட்டி தமிழ்மொழி வகுப்புகள் நிறுத்தப்படுமா? அல்லது வழக்கம் போல்நடத்தப்படுமா? என்ற கேள்வி பெற்றோரின் உள்ளங்களில் உருவாகியுள்ளது.
எனவே, இவ்விவகாரத்திற்குத் தீர்வு காணும் வகையில் கல்வி அமைச்சு மாணவர் எண்ணிக்கையை இக்கால கட்டத்தில் கருத்தில் கொள்ளாமல் வழக்கம் போல் தமிழ்மொழிப் பாடம் நடத்தப்பட வேண்டும் என்று தாய்மொழி ஆர்வலர்களும் பெற்றோரும் எதிர்பார்க்கிறார்கள். கருத்தில் கொள்ளுமா? கல்வி அமைச்சு?
– கவின்மலர்