அமெரிக்கா சீனா இடையே நீண்ட காலமாக வர்த்தகப் போர் தொடர்ந்துவரும் நிலையில் கொரோனா, அண்டை நாடுகளுடனான சீனாவின் செயல்பாடுகள் மீதான அதிருப்தி மிகப்பெரியதாக வெடித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
வர்த்தகக் கட்டுப்பாடு, அதீத வரி, சீனர்கள் மீதான விசா கட்டுப்பாடு, சீன நிறுவனங்களுக்குத் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வரும் நெருக்கடி தற்போது அடுத்தகட்டத்தை அடைந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகக் குழு, அமெரிக்காவில் வர்த்தகம் செய்து வரும் 20 சீன நிறுவனங்களைச் சீன ராணுவத்திற்குச் சொந்தமானது, அல்லது சீன ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது எனப் பட்டியலிட்டிருக்கிறது.
இது, அமெரிக்காவின் பாதுகாப்பைப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளது. இந்த பட்டியல் மூலம் அமெரிக்க அரசு சீனா மீது நிதியியல் தடை விதிக்க அடித்தளம் அமைப்பதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை, அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல என்றும் கூறப்படுகிறது. அமெரிக்க அரசு ஏற்கனவே நாட்டின் பாதுகாப்பு, தகவல் பாதுகாப்பைக் காரணம் காட்டி, அமெரிக்காவில் ஹூவாய், ஹைக்விஷன் நிறுவனத்தின் மீது வர்த்தகத் தடை விதித்துள்ளது. இதோடு சீன மொபைல் கம்யூனிகேஷன்ஸ் குரூப், சீனா டெலிகம்யூனிகேஷன்ஸ் கார்ப், ஏவியேஷன் இண்டஸ்ட்ரீஸ் கார்ப் ஆப் சீனா ஆகிய நிறுவனங்களையும் முக்கிய நிறுவனங்களாகப் பட்டியலில் சேர்த்துள்ளது.
இதுபோல் 20 நிறுவனங்களைச் சீன ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என டிரம்ப் நிர்வாகக் குழு பட்டியலிட்டுள்ளது.