கொரோனா வைரசை கையாளுவதில் ஜனாதிபதி டிரம்ப் தோல்வி

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை விரைவில் 50 லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது. அதேபோல் கொரோனா பலி எண்ணிக்கையும் 2 லட்சத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக அமெரிக்காவில் லட்சக்கணக்கானோர் வேலையை இழந்துள்ளனர். இதனால் அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் டிரம்ப், தீவிரமாக செயல்படவில்லை என்றும், அதனால் தான் பாதிப்பு அதிகரித்தது என்றும், எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் விவகாரத்தை டிரம்ப் கையாளும் விதம் குறித்து அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில் மூன்றில் 2 பங்கு அமெரிக்கர்கள் டிரம்ப் கொரோனா வைரஸ் விவகாரத்தை கையாளும் விதத்தை ஏற்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கடந்த 29, 30 ஆகிய 2 தினங்களில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த 730 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

அவர்களில் 66 சதவீதம் பேர் ஜனாதிபதி டிரம்ப் கொரோனா வைரஸ் விவகாரத்தை கையாளுவதில் தோல்வியை சந்தித்து விட்டதாக கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல் கருப்பின வாலிபர் ஜார்ஜ் பிளாயிட் போலீசாரால் கொல்லப்பட்ட விவகாரத்தையும் ஜனாதிபதி டிரம்ப் முறையாகக் கையாளவில்லை என மூன்றில் 2 பங்கு அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜார்ஜ் பிளாயிட் கொலையை கண்டித்து இனவெறிக்கு எதிராக நாடு முழுவதும் நடந்த போராட்டத்தை ஒடுக்க முக்கிய நகரங்களில் மத்திய போலீஸ் படையை டிரம்ப் களமிறக்கியது நிலைமையை மேலும் மோசமாக்கியது என 52 சதவீத பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அமெரிக்காவில் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் மாகாணமான கலிபோர்னியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 542 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு மொத்த பாதிப்பு 5 லட்சத்து 130 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 7 நாட்களில் மட்டும் கலிபோர்னியா மாகாணத்தில் 1 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

நேற்று ஒரே நாளில் 219 பேர் கொரோனாவுக்கு பலியானதன் மூலம் கலிபோர்னியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 9 ஆயிரத்து 224 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here