மூன்று மிகப்பெரிய பொய்கள்

கோலாலம்பூர் –

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் நேரடிப் பேச்சு வார்த்தை வழி வழங்கப்பட்டதாக 6.61 பில்லியன் வெள்ளி மதிப்பிலான 101 அரசு குத்தகைகள் தொடர்பில் நிதி அமைச்சர் தெங்கு ஜெப்ரூல் அப்துல் அஜிஸ் வெளியிட்ட பட்டியலில் 3 பெரிய பொய்கள் அடக்கியுள்ளன என்று முன்னாள் நிதி அமைச்சர் லிம் குவான் எங் நேற்றுக் கூறினார்.

முதலாவதாக நம்பிக்கைக் கூட்டணி நேரடிப் பேச்சுகள் மூலம் வழங்கிய குத்தகைகள் 1.4 விழுக்காடு அல்ல. அதாவது 6.61 பில்லியன் வெள்ளி மதிப்புடையவை அல்ல. அவை வெறும் 0.07 விழுக்காடுதான். அதாவது 352 மில்லியன் வெள்ளி மதிப்புடையவை என்று லிம் நேற்று நாடாளுமன்றத்திற்கு வெளியே நிருபர்களிடம் கூறினார்.

இவற்றில் பெரும்பாலானவை நம்பிக்கைக் கூட்டணி அரசில் நேரடிப் பேச்சுவார்த்தை மூலம் வழங்கப்பட்டவை அல்ல. மாறாக, தேசிய முன்னணி ஆட்சிக் காலத்திலிருந்து தொடர்ந்த திட்டங்கள் என்றார் அவர்.

இரண்டாவதாக தேசிய முன்னணி காலத்தில் நேரடிப் பேச்சு மூலம் வழங்கப்பட்ட திட்டங்களின் மதிப்பு 6.258 பில்லியன் வெள்ளியாகும். ஆனால், நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட திட்டங்களின் மதிப்பு வெறும் 352 மில்லியன் வெள்ளியாகும் என்று லிம் கூறினார்.

இதைத்தான் அத்திட்டங்களின் மொத்த மதிப்பு 6.61 பில்லியன் வெள்ளி என்று கூறியிருக்கின்றார்கள் என்றார் லிம்.

தேசிய முன்னணியில் இணைந்த முந்தைய நம்பிக்கைக் கூட்டணி அமைச்சர்கள் சிலரும் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடினும் நேரடிப் பேச்சுகள் மூலம் திட்டங்களைக் கேட்டதாகக் கூறப்பட்டதை மூடி மறைக்க ஜெப்ரூல் முயன்றிருப்பது மூன்றாவது பொய்யாக உள்ளது எனவும் லிம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here