நில வளம் காக்கும் நீர்க்காவிரி

சுங்கை சிலாங்கூர்

சிலாங்கூர் ஆறு குறித்து இன்று மலேசியா முழுவதும் பேசப்படுகிறது. அண்மைய காலமாக அடிக்கடி நேரும் குடிநீர்த் தடை  சிலாங்கூர் ஆறு குறித்து மலேசிய மக்களை விரிவாகப் பேச வைத்திருக்கிறது.

மாநிலத்தின் குடிநீர்த் தடைக்குப் பின்னே இருக்கும் அத்தனை களேபரங்களையும் இப்போது நாம் அலசிப் பார்க்க தேவையில்லை என்றாலும் ஆற்றின் பயணம் எத்தனை தூரம் மனித வாழ்கையை அழுகுபடுத்திப் பார்த்தபடி போகிறது என்பது குறித்து பார்ப்பதில் தப்பில்லையே.

பூகோள ரீதியாக சிலாங்கூர்  ஆற்றின் உற்பத்தி மையத்தையும் பயணத் தடங்களையும் அதன் வழியே உருவான சிறு பட்டணங்களையும் பெருநகரங்களையும் தோட்டங்களையும் கடல் சங்கமத்தையும் இங்கே அலசப் போகிறோம்.

பகாங் மாநிலத்தின் பிரேசர் மலையின் மேற்குப் பகுதியில் தொடங்கும் ஆற்றின் பெயர் சுங்கை சங்லோய். இந்த ஆறு மேற்கு திசை பார்த்து வேகமாக இறங்கி வருகிறது.

அப்படி, படுவேகமாக இறங்கி வரும் சங்லோய் ஆற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த குறுக்கே  சுங்கை சிலாங்கூர் அணைக்கட்டு எதிர்பட்டு எழுந்து கம்பீரமாக நிற்கிறது.

2002ஆம் ஆண்டு இந்த அணையானது கட்டி முடிக்கப்படுவதற்கு முன்னர் அடிக்கடி இப்பகுதி காட்டாற்று வெள்ளத்தால் கரை புரண்டு ஓடி மனித வாழ்வுக்கு அச்சத்தை உண்டு பண்ணி வந்ததை வரலாறு தெரிந்தவர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

சுங்கை சிலாங்கூரைப் பாதுகாத்து வந்த வெள்ளை முதலை ஒன்றை 1883ஆம் ஆண்டு பிரிட்டிஸ் ராணுவ  அதிகாரி சிசில் ரேங்கிங் என்பவர் சுட்டுக் கொன்றார் என்பதும் வரலாறு.

முதலையை இவர் சுட்டுக் கொன்ற சில தினங்களில் இங்கு கட்டப்பட்டிருந்த அணை உடைந்து கோலகுபுபாரு வெள்ளக்காடாக மாறி பல மாடிக் கட்டடங்கள் நீருக்கு அடியில் புதைந்து போனதும் வரலாறுதான்.

1.6 மீட்டர் நீளமும் 91.4 மீட்டர் உயரமும் கொண்ட இந்த அணை உடைந்து போனது தொடங்கி இப்பகுதியில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டதால் மலேசிய அரசாங்கத்தின் திட்டப்படி கட்டப்பட்டதுதான் புதிய சுங்கை சிலாங்கூர் அணை.

நிலவளம் காக்கும் நீர்க்காவிரி என வர்ணிக்கப்படும் அளவுக்கு சிலாங்கூர் மாநிலத்தின் 70 விழுக்காடு மக்களின் நீர்த்தேவையை பூர்த்தி செய்யும்  ஆற்றின் பயணம் இந்த அணைக்கட்டிலிருந்துதான் தொடங்குகிறது.

344,529 மில்லியன் டன் எடைகொண்ட நீரை சிலாங்கூர் அணை தடுத்தாற்கொள்ள எஞ்சிய நீரோடு தன் பயணத்தை சிலாங்கூர் ஆறு இங்கிருந்து தொடங்குகிறது.

ஆற்றின் முதல் பயணமே மரத்தாண்டவர் கோயில் என்ற இந்து ஆலயத்தை(மாரான் அல்ல) கடப்பதாக உள்ளது. இந்த மரத்தாண்டவர் கோயிலுக்கு அடுத்து ஸ்ரீ முனீஸ்வரர் வீரபத்திரன் ஆலய தரிசனத்தைக் கடந்து கோலகுபுபாரு நகருக்குள் நுழைகிறது ஆறு.

தொடர்ந்து, ராசா என்ற சிறிய ஊரைக் கடக்கிறது.

ஆற்றின் அருகே செயல்படக்கூடாது என்ற நிலையிலும் சுமார் பத்து ஏக்கர் பரப்பளவில் செயல்படும் முதல் கோழிப்பண்ணை கழிவில் கசிந்துருகி மெதுநடை போட்டு சுங்கை திங்கி, மேரி ஆகிய தோட்டங்களை கடக்கிறது ஆறு.

சுங்கை திங்கி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தைக் கடக்கும்போது ரந்தாவ் பஞ்சாங் நீர் சுத்திகரிப்பு மையம் வருகிறது.

இந்த ரந்தாவ் பஞ்சாங் நீர் சுத்திகரிப்பு மையமானது பத்தாங் பெர்சுந்தை நகர மக்களுக்கு மட்டுமல்லாது மாநிலத்தின் இதர பகுதிகளுக்கும் நீர் போக்குவரத்தை நிகழ்த்தி தாகம் தீர்க்கும் முக்கிய கேந்திரமாக விளங்கி வருகிறது.

தென்னமரம் தோட்டத்தையும் கடந்து சுங்கை சிலாங்கூர் இரண்டாவது நீர் சுத்திகரிப்பு மையத்தையும் கடக்கிறது.

ராசா மூசா சாலையை ஊடுருவும் சிலாங்கூர் ஆறு பெஸ்தாரி ஜெயா அனுமார் ஆலயத்தைக் கடக்கிறது.

கம்போங் குவாந்தான் மின்மினிப்பூச்சி பூங்காவைக் கடந்து கோலசிலாங்கூர் நகரைத் தொட்டு மலாக்கா நீரிணையில் கடலோடு கலக்கிறது.

தோட்டங்கள், இயற்கை பூங்காக்கள், விவசாய நிலங்கள் என அனைத்தையும்  கடந்து அத்தனைக்கும் நீர் தந்து நீர் சார்ந்த வசிப்பிடங்களை உருவாக்கி அதனை பட்டணமாக மாற்றி நகராமாகவும் மெறுகேற்றித் தரும் பணியை இயற்கை அன்னை ஆசிர்வாதத்துடன் அற்புதமாக தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது சிலாங்கூர் ஆறு.

இத்தனை அற்புதங்களை மாநில ஊடுருவல் வாயிலாக அசத்திக் காட்டிக் கொண்டிருக்கும் அற்புதமான ஆற்றில் ரசானக் கழிவை கொண்டு போய் கொட்டி வருகிறான் அற்ப மனிதன்!

  -மு.ஆர்.பாலு 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here