தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து நடிகர் சூர்யா நேற்று ஆவேச அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் , “நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. மாணவர்களுக்கு வாழ்த்துச் சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்லும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. கொரோனா காலத்திலும் தங்கள் தகுதியை நிரூபிக்க தேர்வெழுத நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
சமமான வாய்ப்புகளை உருவாக்கி தரவேண்டிய அரசாங்கம் ஏற்றத்தாழ்வை உருவாக்கும் கல்விமுறையை சட்டமாக கொண்டு வருகிறது. கொரோனா அச்சத்தால் வீடியோ கான்பரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வெழுத உத்தரவிடுகிறது.
தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்பது ஊடகங்களில் அன்றைய விவாதப்பொருளான மாறிவிட்டது. நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமில்லாமல் உயிரையும் பறிக்கிறது. பிள்ளைகளின் தகுதியையும் திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது.
பெற்றோர்களும் பிள்ளைகளைத் தேர்வுகளுக்கு தயார்படுத்த துணைநிற்பது போலவே வெற்றி, தோல்விகளையும் எதிர்கொள்ள தயார்படுத்த வேண்டும். அன்பு நிறைந்த குடும்பம், உறவு, நண்பர்கள் முன்பு இந்த தேர்வுகள் அற்பமானது என்பதை உணர்த்துவது முக்கியம். தற்போது நவீனகால தூதுவர்கள் 6ஆம் வகுப்பு குழந்தை கூட தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க வேண்டும் என்கிறார்கள். இதையெல்லாம் கடந்து முன்னேறுபவர்களை பலியிட நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்.
ஒரே நாளில் நீட் தேர்வு மூன்று மாணவர்களைக் கொன்றிருக்கிறது. இன்று நடந்ததே நேற்றும் நடந்தது. இனி நாளையும் நடக்கும். நாம் விழிப்படையாவிட்டால் மீண்டும் மீண்டும் நடக்கும். அப்பாவி மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கைப்பார்க்காமல், சாதாரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் தேர்வுகளுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்” என்று நடிகர் சூர்யா அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.நடிகர் சூர்யாவின் இந்த கருத்துக்கு சமூக வலைதளத்தில் ஆதரவு பெருகியது.
இந்த நிலையில், நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளார். உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றத்தை நடத்துவதாக கூறும் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான எஸ்.எம்.சுப்ரமணியம் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.